மளிகை கடைகளில் தாராளம்: எளிய மக்களின் உயிர் குடிக்கும் எலி பேஸ்ட், கேக்... தடை கேட்டும் கிடைக்கவில்லை

புதுச்சேரி: எளிய மக்களின் உயிர்குடிக்கும் எலிபேஸ்ட், கேக் மளிகை கடைகளில் தாராளமாக கிடைப்பதற்கு தடை விதிக்கப்படுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போதுமடா... இந்த வாழ்க்கை என்ற சலிப்பு  மற்றும் விரக்தியின் உச்சத்தில், உலகில் தொடர்பை அறுத்துக்கொள்ள முற்படும் மனிதர்களில், மிகப்பெரிய கேள்வியாக எழுவது,  எப்படி இறப்பது  என்பதுதான். விழிப்புணர்வு ஏதுமற்ற மனநிலையில், தங்கள் இன்னுயிரை இமைப்பொழுதில் போக்கிக்கொள்ள, தூக்கில் தொங்குதல், மலையில் இருந்து குதித்தல், நீரில் மூழ்குதல், மின்சாரம் பாய்ச்சிக்கொள்ளுதல், ரயில் அல்லது வாகனங்களில் பாய்ந்து கொள்ளுதல் என தற்கொலை முறைகளின் பட்டியல் நீள்கிறது.

இருப்பினும் விஷம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கைதான் மிக அதிகம். உலகம் முழுவதும் 30  சதவீத மக்கள் நச்சு மருந்து அருந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதில் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், ஆசிய நாடுகளில் வசிக்கும் மக்களே  விஷம் குடித்து சாகின்றனர். ஏனெனில் விஷமருந்துகள் எளிதாக கிடைக்கிறது. மளிகை கடைகளில்  இத்தகைய மருந்துகள் தாராளமாக கிடைக்கிறது. இதில் மிக முக்கியமானது எலி மருந்துதான். பேஸ்ட் வடிவிலும், கேக் வடிவிலும் விற்கப்படுவதால், தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களின் முதல் தேர்வு எலிமருந்தாக இருக்கும். பெட்டிக்கடைகளுக்கு சென்று வாங்கி வந்துவிடலாம். அமெரிக்காவில் 1947ம் ஆண்டு முதல் எலிகளை கொல்வதற்காக ஜிங் பாஸ்பைடு என்ற வேதிப்பொருள் எலி மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் உலகம் முழுவதும் 80 வகையாக எலி மருந்துகள் பயன்பாட்டில் இருக்கிறது.

இதனை எலிகள், அணில், பெருச்சாளி ஆகியவற்றுக்கு பிடித்த பட்டர் மற்றும் உணவு பொருட்களில் கலந்து வைக்கலாம். வீட்டின் உள்ளே திண்ணும் எலி வெளியே சென்று நிச்சயம் சாகும், 100  சதவீதம் எலிகளின் இறப்புக்கு உத்தரவாதம். அதே நேரத்தில் மனிதர்களும் இதில் இருந்து தப்புவதில்லை. எலிகளுக்காக வைக்கப்பட்ட விஷம் தடவப்பட்ட கேக்கை சாப்பிட்ட மாணவன் பலி, எலி மருந்து கேக்கை, திண்பண்டம் என நினைத்து தின்ற குழந்தை பலி என்ற  பரிதாபத்துக்குரிய செய்திகள் அடிக்கடி செய்திகளில் வெளியாகி வருகிறது. மாத்திரை வடிவில் சாக்லேட், கேக், பேஸ்ட் வடிவில் எலிமருந்து விற்பது மிகவும் தவறானது.  உளவியல் ரீதியாக மக்கள் தினமும் பயன்படுத்தும் பேஸ்ட், கேக் வடிவில் விஷ மருந்துகளை உற்பத்தி செய்வது,

பயன்படுத்துவதால் தவறுதலாக குழந்தைகள் சாப்பிட்டு இறக்கக்கூடிய அபாயம் உள்ளது.எலிகளும் பாலூட்டி வகையை சார்ந்தது, அதனை கொல்வதற்காக பயன்படுத்தப்படும் ஜிங் பாஸ்பைடு மருந்தும், அதே மாதிரியான விளைவுகளையும், உயிர் சேதத்தையும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும், சமீபகாலமாக அரசு பொது மருத்துவமனையில் எலிபேஸ்ட் அல்லது மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 6 மாதத்தில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதேபோன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சீறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகிய முக்கியமான உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி செயல்பாட்டை நிறுத்துவதால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.

குறிப்பிட்ட விஷ முறிவு, மாற்று மருந்துகள் கொடுத்து  உயிரிழப்பை உடனே தடுக்க முடியாது என்பதால், நோயாளிகளில் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சையளிக்கப்படுகிறது.ஒருவர் ஜிங் பாஸ்பைடு மருந்தை திண்றால், வயிற்றுக்குள் சென்ற சில மணி நேரங்களில், பாஸ்பைன் என்ற நச்சுவாயுவை உருவாக்கும். இந்த வாயுவானது, உடலில் உள்ள அனைத்து செல்களின் செயல்பாட்டை முடக்கும். குறிப்பாக இதயம், நுரையீரல், கல்லீரல் செல்களில் வளர்ச்சிதை மாற்ற செயல்பாடுகளை நிறுத்திவிடும். இதனால்  உடனடியாக சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை என அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டு இதயம் திடீரென செயல்பாட்டை நிறுத்திக்கொள்வதால் உடனே மரணம் ஏற்படும்.ரத்தம் உறைதல் தன்மை இல்லாமல் போவதால், உள்ளுறுப்புகளில் ரத்தம் கசிந்து அதன் மூலம் மரணம் சம்பவிக்கலாம்.

மளிகை கடைகளில் விற்கப்படும் எலிபேஸ்ட், கேக் ஆகியவற்றால் தமிழகம்- புதுச்சேரியில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடை செய்ய வேண்டுமென தமிழகம்- புதுச்சேரி சட்டசபைகளில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் இதன் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுகப்படவில்லை. எலி மருத்து பாதிப்பு குறித்து, அரசு பொது மருத்துவரிடம் கேட்டபோது: எந்த வகையான விஷமாக இருந்தாலும், நோயாளியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் காப்பாற்றிவிட முடியும். எலி மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது என்பதால், பலர் இதனை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.

எலி மருந்து சாப்பிட்டால், சிறுநீரக செயலிழப்பு, மிக தீவிரமான மஞ்சள் காமாலை ஏற்படும். தொடர்ந்து உடலில் பல உறுப்புகளின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும். குறிப்பாக நமது உடலில் மிகப்பெரிய தொழிற்சாலையாக இயங்கும் கல்லீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், நிலைமையை சிக்கலாக்கி விடும். இதன்காரணமாக ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போகும். மூளை, நுரையீரலில் ரத்தம் கசியும். இதனை தொடந்து  உறங்கிய நிலையிலே கோமாவுக்கு சென்றுவிடுவார். எல்லா  விஷ மருந்துகளும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை பெரியது, சிறியது என்ற வட்டத்துக்குள் அடக்க முடியாது. எனவே அரசு இதனை தடை செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: