குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய கிராம மக்கள்: ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: குடிநீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கொளுந்துறை, எஸ்.காரைக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.  கொளுந்துறை,  கொளுந்துறை கிழக்கு, வடக்கு எஸ்.காரைக்குடி ஆகிய குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் 3 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 2 வருடங்களாக அடிப்படை வசதிகளான காவிரி கூட்டுக்குடிநீர், சாலை வசதிகள், தெருவிளக்கு, மின்சார வசதி, நூறுநாள் வேலை திட்டம் ஆகிய அனைத்து பணிகளும் சரியாக நடைபெறவில்லை.

Advertising
Advertising

கடந்த ஜனவரி முதல் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். மாவட்ட அலுவலகத்தில் மட்டும் 9 மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த வசதிகளும் செய்து தரவில்லை. கலெக்டரிடம் மனு அளித்தபோது, ஜூன் 25க்குள் (நேற்று முன்தினம்) அனைத்து குறைகளும் தீர்க்கப்பட்டு விடும் என உறுதியளித்தார். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கொளுந்துறை, எஸ்.காரைக்குடி பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் ஒப்படைத்து விட்டு கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி விடுவோம்.இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு, பெண்கள் தார்ப்பாய், அடுப்பு, பாத்திரங்களுடன் வந்தனர். கீழே கிடந்த மரக்கிளை கம்புகளை எடுத்து அடுப்பு எரிய விட்டு சமையல் செய்ய துவங்கினர். முதலில் அனைவருக்கும் காபி வழங்கப்பட்டது. தொடர்ந்து சமையல் செய்ய துவங்கியபோது, அதிகாரிகள் கிராமத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில் முதல்கட்டமாக குடிநீர் வசதிகளையும், பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசனையின்பேரில், அடுத்தக்கட்ட வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து 3 மணி நேர போராட்டத்தை முடித்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: