தொடர்ந்து 7 நாள் உயர்வுக்கு பிறகு தங்கம் சவரனுக்கு 448 சரிந்தது: சவரன் 26,000க்கு கீழ் இறங்கியது

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 448 சரிந்து 25,976க்கு விற்கப்பட்டது.   ஆபரண தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே ஏறுமுகத்துடன் உள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 312 அதிகரித்து முதல் முறையாக சவரன் 25,000ஐ தாண்டி 25,288க்கு விற்கப்பட்டது. பின்னர் 2 நாட்கள் சரிவை கண்ட தங்கம் கடந்த 18ம் தேதி முதல் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்பட்டது. எனவே, நேற்று முன்தினம் வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு 304 உயர்ந்து கிராம் 3,303க்கும், சவரன் 26,424க்கும் விற்கப்பட்டது. வர்த்தக முடிவில் இருந்த விலையின்படி தொடர்ந்து 7 நாட்களில் சவரனுக்கு 1,368 அதிகரித்தது. வட்டி விகித நிர்ணயம் மற்றும் டிரம்ப் தலையீடு குறித்து பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் நேற்று முன்தினம் விமர்சித்ததால் சர்வதேச சந்தையில் கடும் சரிவை சந்தித்தது.

இருப்பினும் உள்ளூர் சந்தையில் (இந்தியாவில்) விலை சரிந்ததற்கு தேவை குறைவே காரணம் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தாலும், விலை உயர்வு குறித்து மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. விலை அதிகரித்ததால் மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்த்துள்ளனர். இதனால் தேவை குறைந்து தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. உள்ளூர் சந்தையில் விலை குறைய இதுவே காரணம்’’ என்றார்.

அமெரிக்காவில் பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டியை குறைக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல், ‘‘அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் மற்றும் பொருளாதார சரிவு காரணமாக வட்டி குறைக்க வேண்டிய தேவை ஏற்படுமா என ஆய்வு செய்து வருகிறோம். இதன் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும். மற்றபடி அரசியல் தலையீடுக்கு அடிபணிந்து வட்டியை குறைக்க முடியாது. பெடரல் ரிசர்வ் வங்கிதன்னாட்சி அதிகாரத்தை விட்டுத்தர முடியாது’’ என திட்டவட்டமாக கூறி விட்டார்.

அவர் பேட்டி அளித்த சிறிது நேரத்திலேயே சர்வதேச சந்தையில் தங்கத்தில் முதலீடு குறைந்தது. ஒரு டிராய் அவுன்ஸ் 1,423 டாலராக குறைந்தது. நேற்றும் கடும் சரிவை சந்தித்து நேற்று மாலை ஒரு அவுன்ஸ் 1,406 ஆக இருந்தது. ஒரே ஒரு பேட்டியின் மூலம் சந்தையின் போக்கையே மாற்றி விட்டார் பவல். ஆனால், டிரம்ப், பவல் பணிகள் ஒன்றும் சரியில்லை என விமர்சனம் செய்துள்ளார் டிரம்ப். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

Related Stories: