மண்ணில் புதைந்திருந்த கட்டிட சுவர்கள்: கீழடி அகழாய்வில் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடியில் நடந்து வரும் 5ம் கட்ட அகழாய்வில் மண்ணில் புதைந்திருந்த கட்டிட சுவர்கள் தென்பட்டன. பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்து இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் கடந்த 2015ல் அகழ்வாராய்ச்சி துவங்கியது. தொடர்ந்து 4 கட்டமாக நடந்த அகழ்வாராய்ச்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு செப்.30ம் தேதியோடு 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி முடிவடைந்தது.

இதையடுத்து 5ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 13ம் தேதி துவங்கின. இங்குள்ள கருப்பையா, முருகேசன் ஆகியோரது நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. நேற்று கருப்பையாவின் நிலத்தில் தோண்டிய போது, அரை அடியிலேயே 10 அடி நீள, ஒன்றரை அடி அகலமுடைய நீண்ட கட்டிட சுவர் தென்பட்டது. தொடர்ந்து அருகிலேயே மற்றொரு சுவரும் தென்பட்டது. பழங்கால கட்டிடக் கலையின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த இரட்டை சுவர்கள் உள்ளன என்று அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். மற்றொரு குழியில் தொன்மையான பானை கிடைத்தது. தொடர்ந்து அகழாய்வுப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: