இரண்டாவது முறையாக எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தனிப்பெரும்பான்மை அளித்து ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாக மக்கள் வழிவகை செய்துள்ளனர். அருண் ஜெட்லி விரைவில் நலம் பெறுவார் என நம்புகிறேன். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டிவிட்டனர். 2019 தேர்தல் மக்களின் போராட்டத்திற்கானது. அரசின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, வாக்காளர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்திருப்பதை நாங்கள் நல்ல விஷயமாக பார்க்கிறோம். வட மற்றும் தென் மாநிலங்களில் பா.ஜ., வெற்றியை பதிவு செய்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதும், அதன் மீது பழி போடுவதும் தற்போதைய டிரண்ட் ஆகி விட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது எதிர்க்கட்சிகளை பற்றி உள்ள நோய். எதிர்க்கட்சிகளை போல் அல்லாமல் சில மாநிலங்களில் எங்களின் தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொண்டு, கடுமையாக உழைத்து வருகிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் தேர்தல்களில் ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. தங்களின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் மின்னணு ஓட்டு இயந்திரங்களை கேள்வி கேட்டு வருகின்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்ற தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுக்கிறது.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடரும். எதிர்க்கட்சிகள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். 2019ம் தேர்தலில் பெண் வாக்காளர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்தியா தனது ஜனநாயகத்தின் மீது பெருமை கொள்கிறது. நிலையான, நீடித்த வளர்ச்சியையே மக்கள் விரும்புகிறார்கள். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது பற்றி விவாதிக்க ஏன் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. தனித்தனியாக நடத்தப்படும் தேர்தலால் செலவு அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதால் செலவு குறைந்துள்ளதற்கு ஒடிசா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மக்கள் புதிய இந்தியாவிற்காக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் தங்களது தோல்வியையும், மக்களின் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாமான்ய மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். ஜார்க்கண்டில், அப்பாவியை கும்பலாக சென்று தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்களை ஏற்கவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. இதற்காக ஒட்டுமொத்த ஜார்க்கண்ட் மாநிலத்தை குறைசொல்வது தவறு. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். உண்மையான குற்றவாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும். ஆயுஸ்மான் பாரத் திட்டத்தால், பலர் பயன்பெறுவார்கள். குடிதண்ணீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Related Stories:

>