மதம், மொழி, இனம் கடந்து இன்று நாம் ஒன்றுபட்டுள்ளோம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: பெரும்பான்மையோடு வெற்றிபெற வைத்த நாட்டு மக்களுக்கு நன்றி. புது சக்தியுடன் எங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று  மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை வழங்கியுள்ளார். நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக  பதிவியேற்றார். கடந்த 17-ம் தேதி தொடங்கிய, 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கிடையே, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.  அவரது உரையில், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இந்நிலையில், மக்களவையில் இன்று ஜனாதிபதி  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  பதிலுரையளித்த பிரதமர் மோடி, நமது நாடு குறித்து, தலைவர்கள் பல கனவுகளை கண்டிருந்தனர். ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட அனைத்து எதிர்க்கட்சி  தலைவர்களையும் நான் வரவேற்கிறேன் என்றார்.

அனைத்து சவால்களையும் நம்மால் எளிதாக முறியடிக்க முடியும். விவாதத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை  வரவேற்கிறேன் என்று மோடி பதிலுரையாற்றினார். இந்திய மக்கள் தங்களைவிட தேசத்தையே அதிகம் விரும்புகிறார்கள்; அதனால் தான் நிலையான  அரசை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் மக்களின் நம்பிக்கையை பெறுவதைத் தவிர வேறு ஒரு பெரிய வெற்றி இருக்கவே முடியாது என்றார்.

நாட்டை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள், பாதையிலிரிந்து நாங்கள் விலகவேயில்லை; நாட்டை உயர்த்துவதென்பது, ஒவ்வொரு இந்தியனும்  அதிகாரமிக்கவனாவதும் நாட்டில் நவீன உள்கட்டமைப்பு உருவாவதும் தான் என்றார். மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அதை விவாதித்து  நிறைவேற்றுவோம்; எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று வலுவாக செயல்படுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.  ஆனால், ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார். தேர்தல் என்பதை யார் வென்றார்கள்  யார் தோற்றார்கள் என நான் பார்ப்பதில்லை; இந்திய மக்களுக்காக பணியாற்றி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னைப்பொருத்தவரை  மனதிற்கு திருப்தி தரும் என்றும் கூறினார்.

இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது, பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரம், ஊடக துறையை முடக்கிய நாள் என்றும் மதம், மொழி, இனம்  கடந்து இன்று நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்றார். வாஜ்பாய் மட்டுமல்ல நரசிம்மராவ் ஆட்சியை கூட காங்கிரஸ் பாராட்டி பேசவில்லை என்றும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தை தற்போது யாரும் பெரிதாக கூட பாராட்டுவதில்லை; பாஜக அரசு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா தந்தது;  மன்மோகனுக்கு காங்கிரஸ் ஏன் பாரத ரத்னா தரவில்லை? என்றார்.

Related Stories:

>