குமரி மேற்கு கடற்கரையில் அலையில் சிக்கி பலியாகும் சுற்றுலா பயணிகள்

*  மரைன் போலீசாருக்கு ரோந்து படகுகள் இல்லாத அவலம்

* கேரளாவை போல் பாதுகாப்புக்கு மீனவர்கள் நியமிக்கப்படுவார்களா?

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் பல இடங்களும் சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகளாக உள்ளன. வட்டக்கோட்டை, கன்னியாகுமரி, மணக்குடி, முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் இவற்றில் பிரதான இடங்களாக உள்ளன. மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகள் அலைகள் குறைவாக காணப்பட்டாலும் மேற்கு கடற்கரை பகுதிகளில் அலைகள் எப்போதும் சீற்றத்துடன் காணப்படுவது இயல்பான ஒன்றாகும். மேற்கு கடல் பகுதியில் முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்பட்டுள்ளன.

அத்துடன் பல பகுதிகளிலும் மீனவர்களின் மீன்பிடித்தல் வசதிக்காக தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் நீரோட்டத்தின் தன்மை மாறுபடுகிறது. அலைகளின் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. தென் தமிழக கடல் பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதிகளாக குமரி மாவட்ட கடல் பகுதிகள் காணப்படுகிறது. இதனால் பிற கடல் பகுதிகளில் உள்ளதை காட்டிலும் மேற்கு கடற்கரை பகுதிகள் விரைவாக கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு கடற்கரை என்பதே காணாமல் போயுள்ளது. மேலும் நிலப்பரப்பு கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் அலை வீசுகின்ற பகுதிகளில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரம் வரை கடற்கரையுடன் இருந்த மேற்கு கடற்கரை பகுதிகளை இப்போது காண முடிவது இல்லை.

 கிழக்கு கடற்கரை பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மேற்கு கடற்கரை பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாகவே உள்ளது. மேலும் இந்த அலைகளில் சிக்குபவர்கள் உயிருடன் மீள்வது கடினமாகிவிடுகிறது. கடல் பகுதிகளில் உள்ள பாறை கூட்டங்களில் சிக்கி தலை மோதுவதால் உடனே மயக்க நிலைக்கு செல்வதும், மரணமடைவதும் நிகழ்ந்து விடுகிறது. இதனால் சுற்றுலாவுக்கு உகந்தது என்ற நிலைமை என்பது மேற்கு கடற்கரை பகுதிகளில் மாறிவிட்டது. கடலில் கால் நனைக்க சென்றவர்கள், குளிக்க சென்றவர்கள், கடற்கரையில் விளையாட சென்ற மாணவர்கள் என்று அடுத்தடுத்து இழுத்து செல்லப்பட்டு உயிரிழக்கின்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உள்ளூர் வாசிகள், வெளியூரை சேர்ந்தவர்கள் என்று எந்த பாகுபாடுமின்றி உயிரிழப்புகள் நடைபெறுகிறது.

கடலில் ஒரு பகுதியில் இழுத்து செல்லப்படுகின்றவர்கள் பல கி.மீட்டருக்கு அப்பால் வேறு ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்படுகின்ற அவலம் தொடர்கிறது. மண்டைக்காடு அருகே புதூர் கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் 16ம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்களை அலை இழுத்து சென்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இனயம்புத்தன்துறையை சேர்ந்த ஒருவரது திருமணத்திற்கு வந்த பேஸ்புக் நண்பர்களான ஐந்து பேர் கடற்கரையில் கால் நனைக்க சென்றபோது அலையில் சிக்கிய நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன், சங்கீதா ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.  

கடந்த மே 12ம் தேதி ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையில் நண்பர் வீட்டிற்கு வருகை தந்த மதுரையை சேர்ந்த 12 மாணவர்கள் குழு கணபதிபுரம் ஆயிரங்கால் பொழிமுக பகுதியில் கடற்கரையில் விளையாட சென்றபோது அவர்களை கடல் அலை இழுத்து சென்றது. இதில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் பின்னர் சடலமாகத்தான் மீட்கப்பட்டிருந்தார். இதுபோன்று பலியானவர்கள் பட்டியல் நீளுகிறது. குமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக மாறி வருகின்ற நிலையில் கடற்கரையை பற்றியும், அலைகளை பற்றியும் எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள் சுற்றுலா வரும்போது திடீரென்று கடலுக்குள் சென்று குதிப்பதும், விளையாடுவதும், கிழக்கு கடற்கரை பகுதிகளை போன்று அலைகளால் பிரச்னை இருக்காது என்று கருதி குளிக்க முற்படுவதும் உயிரிழப்பில் கொண்டு சென்று விடுகிறது.

இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், கடற்கரை பகுதிகளில் உள்ள கிராமங்களில் விழாக்களுக்காகவும், விடுமுறை காலங்களிலும் வருகின்றவர்கள் பொழுது போக்கிற்காக பாதுகாப்பற்ற நிலையில் கடற்கரை பகுதிக்கு செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் கடற்கரை பகுதிகளை நன்கு அறிந்து வைத்துள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை கடலோர குழும காவல் பணிகளில் சிறப்பு பிரிவாக அமைத்து சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்ற பகுதிகளில் பாதுகாப்பு சார்ந்த பணிகளுக்கு நியமனம் செய்வதின் வாயிலாக இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

அரசால் செய்யமுடியாததை மீனவர்கள் செய்கிறார்கள்

இது தொடர்பாக தெற்காசிய மீனவர் தோழமை பொதுசெயலாளர் சர்ச்சில் கூறுகையில், கன்னியாகுமரி மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் கடலோர காவல் குழும காவல்நிலையங்கள் (மரைன் போலீஸ் ஸ்டேஷன்) உள்ளன. கன்னியாகுமரி கடற்கரை காவல் குழுமத்திற்கு சொந்தமான இரண்டு படகுகளும் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளதால் கடலில் மாயமாகின்றவர்களை மீட்பதற்கு அந்த படகுகளை பயன்படுத்த முடிவதில்லை. மீனவர்கள்தான் தாங்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் படகுகளை பயன்படுத்தி தேடுகின்றனர். கடலோர காவல் குழும போலீசார் தேடுதல் பணியில் கடற்கரையில் மட்டுமே ஈடுபட முடிகிறது.

கடலுக்குள் அவர்களால் படகு இல்லாமல் செல்ல இயலுவதில்லை. ஆனால் மீனவர்கள் கடலுக்குள் நீந்தி சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு மாணவரை மண்டைக்காடு புதூர் சம்பவத்தில் உயிரோடு மீட்டனர். அரசு துறையால் செய்ய முடியாத மீட்பு பணியை மீனவர்கள் செய்து சாதித்துள்ளனர். ஓகி புயலுக்கு பின்னர் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்களை கேரளா அரசு சேர்த்துள்ளது. இதனை போன்று தமிழக அரசும் சேர்க்க வேண்டும். குளச்சல் மற்றும் கன்னியாகுமரி கடலோர காவல் நிலையத்திற்கு புதிய தேடுதலுக்கான படகுகளை உடனடியாக வழங்க வேண்டும்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: