பிரதமரின் யோகா விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து: மோடி டிவிட்டர் பதிவு

புதுடெல்லி: பிரதமரின் யோகா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று முன்தினம் இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், யோகா பயிற்சியை ஊக்குவிக்கவும், அதன் வளர்ச்சிக்காக சிறப்பான பங்களித்தவர்களுக்கும் பிரதமரின் யோகா விருது வழங்கப்பட்டது.

அவர்களை பாராட்டி பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `ஆரோக்கியமான உலகை உருவாக்க பலர் யோகா பயிற்சி மேற்கொள்ள உந்துதலாக இருந்த உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். இதை அவர் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், ஜப்பானிய மொழிகளில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஜப்பானில் 1980ம் ஆண்டு, பீகாரை சேர்ந்த சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்ட ஜப்பான் யோகா நிகேதன், அந்நாடு முழுவதும் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் அங்கு யோகா பயின்று வருகின்றனர். அதேபோன்று, இத்தாலியை சேர்ந்த அன்டோனிட்டா ரொஜி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக யோகா செய்து வருகிறார். தனது சர்வ யோகா இன்டர்நேஷனல் மூலம் ஐரோப்பிய நாடுகளில் யோகாவை வளர்த்து வருகிறார்’ என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: