நடிகர் சங்கத் தேர்தலை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த அனுமதி: சென்னை போலீஸ் உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மயிலாப்பூர் புனித எப்பாஸ் தனியார் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான  தேர்தல் நாளை மறுநாள் (ஜூன்-23) நடைபெறவிருந்தது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் ,இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும்  போட்டியிடுகின்றன. சென்னை அடையாறு, எம்ஜிஆர்-ஜானகி கலைக்கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்தனர். ஆனால், அந்த இடத்தில் நடிகர் சங்க தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என சென்னை உயர்  நீதிமன்றத்தில் மாநகர காவல்துறை தெரிவித்தது.

நடிகர் சங்க தேர்தலை குறிப்பிட்ட கல்லூரியில் நடத்த முடியாது என நீதிமன்றம் கூறியது. இதற்கிடையே, நடிகர் சங்கத்தின் 61 உறுப்பினர்கள் மாற்றம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர் நடிகர்  சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி இத்தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டார். இதனையடுத்து தென் சென்னை  மாவட்ட சங்கங்களின் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால தடை விதித்து திட்டமிட்டபடி தேர்தலை நடத்த அனுமதிக்க கோரியும் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு  முறையிட்டனர்.

அப்போது, அவர் நடிகர் சங்கத்தின் தேர்தலை நிறுத்திவைத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். அதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க முடியாது. மனு தாக்கல் செய்யுங்கள் நாளை 21-ம் தேதி விசாரிக்கிறேன் என்றார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, இருதரப்பு வாதங்களையும் கேட்டு தேர்தல் நிறுத்த  பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது. தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது’ என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு  தள்ளி வைத்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான விஷால் அணி தரப்பு வழக்கறிஞர் பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக்  கொண்ட தலைமை நீதிபதி நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு கோரிய மனு மீதான விசாரணை பெசன்ட்நகரில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மயிலாப்பூர் புனித எப்பாஸ் தனியார் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் சென்னை காவல்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: