ரூ.41 கோடி நிலுவை தொகை வழங்காததால் கருகிய கரும்புகளுடன் கலெக்டரை விவசாயிகள் முற்றுகை: திருவள்ளூர் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ.41 கோடி நிலுவை தொகை வழங்காததால், கருகிய கரும்புடன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை  ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு பூண்டி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருத்தணி ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை, கடம்பத்தூர், மப்பேடு,  அரக்கோணம், சாலை,  தக்கோலம், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை அரவைக்காக விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

இந்த ஆலையில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு பெற்று அரவை செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு, மத்திய அரசு 2,550 ரூபாயும், மாநில அரசு 450 ரூபாயும்  என ரூ.3,000 வழங்கப்பட வேண்டும். இதில், கரும்பு ஏற்றி வரும்  வாகனங்களுக்கு ₹100 பிடித்தம்போக, ஒரு டன்னுக்கு ரூ.2,900 வீதம் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். ஆனால், கரும்பு வெட்டி அனுப்பிய வகையில், ஆலை நிர்வாகம் கடந்த 2013-14ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு பணம் வழங்கியுள்ளது.

அதன்பின்னர் 2017 வரை 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் கரும்பு அனுப்பிய வகையில் ரூ.22 கோடி நிலுவையில் வைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2018-19ம் ஆண்டு 2,59,000 டன் கரும்புகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்தது. இதற்கான ரூ.67.68 கோடியில் இதுவரை 48.53 கோடி பணம் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.19.15 கோடி பணம்  நிலுவையில் உள்ளது.மேலும் நடப்பாண்டு கடும் வறட்சியால் திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்ததால் 1,000 ஏக்கருக்கு மேல் கரும்புகள் கருகியது. இதனால்  மனமுடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்துக்கு கருகிய கரும்புகளுடன் வந்தனர்.

கலெக்டரை கருகிய கரும்புகளுடன் சூழ்ந்து கொண்டு, திருவள்ளூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். அப்போது, உங்கள் கோரிக்கைகளை  அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். இதையடுத்து விவசாயிகள் இருக்கையில் அமர்ந்தனர். இந்த சம்பவத்தால் விவசாயிகள் குறை கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: