கடும் அமளிகளுக்கு இடையே முத்தலாக் தடை சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: கடும் அமளிகளுக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முஸ்லீம் ஆண்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதை தடை செய்யும் மசோதா, கடந்த மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர், அது மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. அங்கு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 16வது மக்களவையின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்ததால், மசோதாவும் காலாவதியாகி விட்டது. மாநிலங்களவையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கும்போது, மக்களவை கலைக்கப்பட்டால், அந்த மசோதா காலாவதி ஆகாது.

அதேவேளையில், மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தால், அது காலாவதியாகி விடும். மாநிலங்களவையில் பாஜ அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், முத்தலாக் தடை மசோதா 17-வது மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் முடிந்து மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: