தண்ணீர் பிரச்னை பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் நடப்பதாக இருந்த முதல்வர் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், ஓட்டல்கள், மேன்ஷன்கள், பள்ளிகள், மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள், அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு தண்ணீர் பிரச்னையை சமாளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாகவே செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் சென்னையில் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் முடிவில் பேட்டி அளித்த அமைச்சர் வேலுமணி, சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கூறினார். இது பொதுமக்கள் இடையே விமர்சனத்துக்குள்ளாகியது. அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று முன்தினம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சென்னை மற்றும் புறநகர் மக்கள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீருக்காக வழங்கும் தண்ணீரை பொதுமக்கள் துவைக்க, குளிக்க மற்றும் வேறு காரணங்களுக்கு உபயோகப்படுத்துகிறார்கள். அதனால்தான் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இதை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார். மேலும், தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், பல்வேறு துறை செயலாளர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் இரவு இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏன் ரத்தானது என்பது குறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். தற்போது அவருக்கு தொண்டையிலும் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனால்தான் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர், தேர்தல் பிரசாரத்தில்கூட பேச முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தனர். தொண்டை பகுதியில் என்டோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை செய்து, ஏதாவது பிரச்னை உள்ளதா என்றும் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரிசோதனை நேற்று காலை 10 மணி வரை நடந்தது. பின்னர் முதல்வர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். நேற்று முழுவதும் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால்தான் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.

2வது முறை ரத்து

தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் கூட்டம் ரத்து செய்யப்படுவது இது 2வது முறையாகும். கடந்த திங்கட்கிழமையும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் அமைச்சர் வேலுமணி தண்ணீர் பிரச்னை குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்ததால் முதல்வர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நேற்று 2வது முறையாக முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், முதல்வர் உடல்நலத்துக்கு என்ன பிரச்னை என்பது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related Stories: