‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனைக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என தகவல்

 சென்னை :  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனைக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ யோசனை குறித்த ஆலோசனைக் கூட்டம்

மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மாறி, மாறி வருவதால் ஆண்டுதோறும் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், தேர்தல் செலவும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை நடத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து விவாதிக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினரை கொண்டுள்ள கட்சியின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது. இதில், 2022ம் ஆண்டு நாட்டின் 75 சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் 150ம் ஆண்டு விழா ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதிமுக ஆதரவு அளிக்கும் என தகவல்

இந்நிலையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனைக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சிவி.சண்முகம், மாநிலங்களவைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்த அதிமுகவின் நிலைப்பாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதனை ஆதரித்து இருவரும் கருத்துக்களை முன்வைப்பார்கள் என்று தெரிகிறது.

2015 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இது குறித்த விவாதம் எழுந்த போது, அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆதரித்தார். பின்னர் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தலாமா என்று மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஆண்டு கேட்டபோது, அதனை அதிமுக எதிர்த்துள்ளது. தற்போதைய நிலையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த அதிமுக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: