கெத்தை வனப்பகுதியில் காட்டுத் தீ 30 ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்

மஞ்சூர்: கெத்தை வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயில் 30 ஏக்கரில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் தாக்கத்தால் மஞ்சூர் சுற்றுப்புறங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகி வருகிறது. கடந்த வாரத்தில் சில தினங்கள் மட்டும் தென்மேற்கு பருவமழை பெய்தது. பெரிய அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாரல் மழையே நீடித்ததால், மீண்டும் சமவெளி பகுதிகளைபோல் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் கெத்தை சாலையில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.

ஏற்கனவே செடி, கொடிகள் சருகாய் கிடந்ததால் தீ வேகமாக பரவியது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த வனப்பகுதியில் தீ எரிந்தது. தொடர்ந்து எல்ஜிபி எஸ்டேட் பகுதியிலும் காட்டு தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையில், வனவர் ரவிகுமார் உள்பட 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி நேற்று பிற்பகல் காட்டு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.திடீர் காட்டுத்தீயால் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான 30 ஏக்கர் வனம் எரிந்து நாசமானது.

Related Stories: