ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.. மன்னார்குடி அருகே நடந்தது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று விவசாயிகள், பொது மக்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் இதுபற்றி தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரகசிய ஆதரவு அளிக்கிறதோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த  திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் டெல்டா மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக தொடர் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 1ம்  தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ைஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்,

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், விவசாய தொழிலாளர்கள்  நடவு செய்யப்பட்ட வயலில் இறங்கி கைகளில் நாற்றுகளை பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர் தங்களின் உயிரை கொடுத்தேனும் நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என ஆவேசமாக கூறினர்.

Related Stories: