நெல்லை புதிய பஸ் நிலையத்தில் திடீர் தடுப்புகளால் பயணிகள் பாதிப்பு: வியாபாரிகள் எதிர்ப்பு

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் 120க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தின் 5 பிளாட் பாரங்களிலும் டீக்கடைகள், சுவீட்ஸ் ஸ்டால், பழக்கடைகள் இயங்கி வருகின்றன. பஸ்கள் வந்து செல்ல பஸ்நிலையத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு என 3 இடங்களில் நுழைவு வாயில்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

பஸ் நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்ப வரும் மக்கள், தங்களது இருசக்கர வாகனங்களை பிளாட்பாரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் பஸ்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில் நுழையாமல் தடுக்க பஸ் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில் மாநகராட்சி சார்பில் இன்று காலை திடீர் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

இரும்பு கம்பியால் பாதையை தடுத்து தடுப்பு அமைத்தனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். புதிய பஸ் நிலையத்தை பொறுத்தவரை தற்போது ஏற்படுத்தப்படும் தடுப்பு தேவையில்லாதது. இந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் அங்கு தடுப்பு அமைப்பதாக கூறுகின்றனர். அது தவறு. அந்த வழியாக சர்குலர் பஸ்களை இயக்கினால் எந்தவித பாதிப்பும் இருக்காது. அந்த பகுதியில் யாரும் வாகனங்களை நிறுத்தமாட்டார்கள். மேலும் அப்பகுதி வியாபாரிகளுக்கும் அது பயனுள்ளதாக அமையும்.  ஆனால் அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் தடுப்புகளை ஏற்படுத்துவதால் பயணிகளுக்கு கூடுதல் சிரமம்தான் ஏற்படும்.

இதுகுறித்து பஸ்நிலைய வியாபாரிகள் சிலர் கூறுகையில், வாகனங்கள் செல்வதை தடுக்க நுழைவு வாயிலில் மாநகராட்சி சார்பில் தடுப்பு திடீரென அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படும். பயணிகளும் நீண்டதூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்  பெண்கள் மற்றும் வயதானவர்கள், ஆட்டோக்களில் வருகின்றனர். தற்போது தடுப்பு ஏற்படுத்தியுள்ளதால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனர். பஸ் நிலையத்தின் நுழைவுவாயிலில் திடீரென தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: