கோடை விடுமுறைக்கு பின்பும் ஊட்டியில் குறையாத கூட்டம்

ஊட்டி: நீலகிரியில் மே மாதம் இறுதி வாரதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்குவது வழக்கம். தொடர்ந்து 3 மாத காலம் காற்றுடன் கூடிய மழை பெய்யும். அதிக மேக மூட்டமும் காணப்படும். குளிரும் சற்று அதிகமாகவே காணப்படும். எனவே இந்த காலநிலையை விரும்பாமல் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதில்லை. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தாமதமாக கடந்த வாரம் துவங்கியது. துவங்கிய ஓரிரு நாட்கள் மட்டும் மேக மூட்டமும், சாரல் மழையும் இருந்தது. இதனால், ஊட்டியில் குளிர் அதிகமாக காணப்பட்டது. ஆனால், இந்த காலநிலை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த ஒரு வார காலமாக ஊட்டியில் மிதமான காலநிலை நிலவுகிறது. மழை அதிகம் இல்லை. வெயில் அடிக்கிறது. அவ்வப்போது மேக மூட்டம் காணப்படுகிறது. அதிக குளிர் நிலவவில்லை. இந்த கால சூழ்நிலை சுற்றுலா பயணிகளுக்கு இதமானதாக உள்ளது. வெயிலும், மேக மூட்டமும் காணப்படுவதால், சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க முடிகிறது.

இதனால், கோடை விடுமுறைக்கு பின்னரும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக தற்போது கூட்டம் சற்று அதிகரித்துள்ளது. வார நாட்களிலும் தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதமான கால நிலை நிலவுவதை மற்றவர்களும் கேள்விப்பட்டு ஊட்டிக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்ததால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரமும் களை கட்டி காணப்படுகிறது.

Related Stories: