ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்!

டெல்லி: ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத்தின் (17வது மக்களவை) முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எம்பிக்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பமான மற்றும் தாய்மொழியில் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-வை சேர்ந்த ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 17-வது மக்களவையின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அடுத்த சபாநாயகர் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories: