2 ஆண்டுக்கு எடுத்த காப்பீட்டில் வரிச்சலுகை பெறுவது எப்படி?: அலர்ட் ஆறுமுகம்

தனிநபர் அல்லது குடும்பத்துக்கு சேர்த்து மருத்துவக் காப்பீடு எடுக்கலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்த்து பாலிசி எடுப்பதுதான் சிக்கனமானது. எந்த வகையான காப்பீடாக இருந்தாலும் அதற்கு வரிச்சலுகை உண்டு. வருமான  வரி சட்டப்படி, 80D பிரிவின் கீழ், மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகைக்கு வரிச்சலுகை கிடைக்கும். உதாரணமாக, தனிநபர் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் காப்பீடு எடுத்து பிரீமியம் செலுத்தினால் ஆண்டுக்கு ₹25,000 வரை  வரிச்சலுகை பெற முடியும். பெற்றோர் பெயரில் காப்பீடு செய்தால் கூடுதலாக ₹25,000 வரிச்சலுகையும், பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால் மேலும் ₹25,000 சேர்த்து ஆண்டுக்கு ₹75,000 வரை வரிச்சலுகை பெற வழிவகைகள் உள்ளன. பொதுவாக காப்பீட்டு திட்டத்தில் சேர்பவர்கள் ஆண்டுதோறும் புதுப்பித்து வருகின்றனர். இதற்கு அந்தந்த நிதியாண்டில் வரிச்சலுகை பெற முடியும். தனிநபர், குடும்பத்துக்கு சேர்த்து எடுத்தாலும் வரிச்சலுகையில் மாற்றமில்லை.

Advertising
Advertising

 இருப்பினும், சில காப்பீடு நிறுவனங்கள் ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்துவதை விட, இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேல் சேர்த்து பிரீமியம் கட்டினால் தள்ளுபடி வழங்குகின்றன.  உதாரணமாக, ஆண்டுக்கு பிரீமியம் தொகை ₹25,000 செலுத்துவதாக வைத்துக்கொள்ளலாம். இதுவே 2 ஆண்டுக்கு சேர்த்து செலுத்தும்போது அதற்கு சில காப்பீடு நிறுவனங்கள் தள்ளுபடி வழங்குகின்றன. 7.5 சதவீதம் தள்ளுபடி வழங்கினால்  ₹46,250 செலுத்தினால் போதும். இப்போது, 2 ஆண்டுக்கு பிரீமியம் செலுத்தியிருந்தால் அதில் பாதி ஓர் ஆண்டுக்கும், மறு பாதி அடுத்த ஆண்டுக்கும் வரிச்சலுகையாக கிடைக்கும். அதாவது, மேற்கண்ட 2 ஆண்டுக்கான பிரீமியம் தொகைப்படி ஆண்டுக்கு தலா ₹23,125  வரிச்சலுகை பெறலாம். இவ்வாறு சேர்த்து செலுத்தினால், வயது அதிகமாவதற்கு ஏற்ப பிரீமியம் தொகை கூடுவதில் இருந்து தப்பிக்கலாம். அதேநேரத்தில், 3வது ஆண்டில் இருந்து வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும். அதோடு, பிரீமியத்தை வங்கி கணக்கில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனையாக செலுத்தியிருந்தால் மட்டுமே வரிச் சலுகையை பெறமுடியும். ரொக்கமாக செலுத்தினால் வரிச்சலுகை கிடைக்காது.

Related Stories: