சட்ட நடவடிக்கைகள் பாயும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் இனி அபராதம் செலுத்தி தப்ப முடியாது: புதிய விதிமுறைகள் அமல்

மும்பை: கருப்பு பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. வரி ஏய்ப்பு செய்தவர்கள், தங்கள்  மீது வழக்கு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால், அவர்கள் சம்மந்தப்பட்ட துறை விதிக்கும் அதிகப்படியான வரியை செலுத்த வேண்டியது இருக்கும். புதிய வழிகாட்டி விதிமுறைகள் 30 பக்கங்கள் அடங்கிய தொகுப்பாக உள்ளது. நேரடி வரிகள் சட்டத்தின்கீழ், வரி ஏய்ப்பு செய்தவர்கள் அபராதம் செலுத்திவிட்டு சட்ட நடவடிக்கையை தவிர்க்கும் முறைக்கு பதிலாக அவர்கள் மீது வழக்கு  நடவடிக்கை எடுக்கப்படும். புதிய விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) 3 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த புதிய விதிமுறைகள் நேற்று அமலுக்கு வந்துவிட்டது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால்  கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் அமலுக்கு வந்த முந்தைய விதிமுறைகள் காலாவதியாகிவிட்டது.

Advertising
Advertising

 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் வைத்துள்ள பணம், சொத்துகள் தொடர்பாக விவரம் தெரிவித்து, வரி மற்றும் அபராதம் செலுத்தும் தீர்வு முறை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சட்டத்தில் முன்பு அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  புதிய விதிமுறைகளில் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கருப்பு பண ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் வரி ஏய்ப்பவர்கள், தாங்களாக முன்வந்து விவரம் தெரிவித்து வரி, அபராதம் செலுத்தி தீர்வு  காணும் முறையை அனுமதிக்கவில்லை. இருப்பினும் வரி ஏய்ப்பவர்கள் தாங்களாக முன்வந்து கருப்பு பண விவரங்கள் உள்ளிட்டவற்றை ஒப்புக் ெகாண்டு தெரிவித்து 30 சதவீதம் வரி மற்றும் அதிகபட்ச அபராதம் செலுத்தி தீர்வு காணும்  முறையை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தது.

 பொதுவாக போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை மாற்றி வரி ஏய்ப்பு செய்கின்றனர். சில நிறுவனங்கள் போலியான கடன் ஆவணங்களை காட்டி ஏமாற்றுகின்றன. வரி ஏய்ப்பவர்கள், மற்றவர்களும் வரி ஏய்ப்பதற்கு வழி வகுக்கிறார்.  எனவே வெறும் அபராதத்தை செலுத்தி தப்ப முடியாது. அபராதம் செலுத்தி சட்டத்தின் பிடியில் இருந்து நழுவ வரி செலுத்துவோருக்கு உரிமை அளிக்கப்படவில்லை. சமரச தீர்வு காண்பது பற்றி அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்ததால், வரி ஏய்ப்பு வழக்குகள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

* புதிய வழிகாட்டி விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் அமலான முந்தைய வழிகாட்டி நெறிமுறைகள் காலாவதியாகிவிட்டது.

*  புதிய வழிகாட்டி விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், வரி ஏய்ப்பவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

* ஜூன் 17ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் புதிய விதிமுறைகளின்படி பரிசீலனை செய்யப்படும். புதிய சமரச தீர்வு முறையின்கீழ் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

புதிய விதிமுறைகள்: முக்கிய அம்சங்கள்

* சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சமரச தீர்வுக்கு சம்மதித்தால், வரி ஏய்ப்பு செய்தவர்கள் உரிய வரியுடன் அதிகப்படியான அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் வழக்கு சட்ட நடவடிக்கையை தவிர்க்கலாம்.

* புதிய விதிமுறைகள் கடுமையான நடவடிக்கையை கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு குற்றங்களுக்கு ஒன்றாக தீர்வு காண முடியாது. 1. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்துகள் பற்றியது. 2.  பினாமி பண பரிவர்த்தனைகள் என தனித்தனியாக தீர்வு காணப்படும்.

Related Stories: