மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு அடுத்த தலைவலி: மருத்துவர்களை தொடர்ந்து ஆசிரியர்களும் போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் 7-வது நாளை எட்டிய நிலையில், ஆசிரியர்களும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த இளநிலை  மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணி  செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. சில தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை. இதன்  காரணமாகநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதி அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப  வேண்டும் என்று, முதல்வர் மம்தா பானர்ஜி சில தினங்களுக்கு முன் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு நேரில் சென்று எச்சரித்தார். மிரட்டும்  தொனியில் முதல்வர் மம்தா பேசியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.

மேலும், மம்தாவின் செயலை கண்டித்து 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும்,   மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது  தேசிய போராட்டமாக மாறியது. இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவர்களுடன் தற்போது, மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, ஊதிய உயர்வு கோரி மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை போலீசார் தடுக்க முயன்றதால் பரபரப்பு  நிலவியது. மேற்கு வங்கத்தில் ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள்  மாநில கல்வி அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நேரம் கொடுக்கப்படாத நிலையில், கல்வி அமைச்சரின் அலுவலகம்  அமைந்துள்ள பிகாஷ் பவானை நோக்கி சென்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தடுக்க போலீசார் தடுப்புகள்  (barricade) அமைத்திருந்த நிலையில் அவற்றை, தள்ளிவிட்டுவிட்டு 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: