வேலூர்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலமாக 50 லட்சம் மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
சத்துணவு மையங்களில் சமையல் செய்யும் பணியாளர்கள் தூய்மையான முறையில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் உணவை திறந்து வைப்பதால் சில நேரங்களில் பல்லி, பூச்சி போன்றவை விழுந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. எனவே, மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில், சத்துணவு பணியாளர்களுக்கு துண்டு, சோப்பு, நகவெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. தினமும் கைகளை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொண்டு பின்னர் சமையல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சத்துணவு உண்ணும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு சமையல் செய்யும் பணியாளர்கள், தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சமையல் பொருட்களை முன்வரிசையில் அடுக்கி வைத்து, புதிதாக வரும் பொருட்களை பின்னால் வைத்து பயன்படுத்த வேண்டும்.