வேலூரில் இப்படியும் விநோதம் விவசாயத்துக்காக ஐடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்

வேலூர்: வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவர் ரங்கநாதன், முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் தனேஷ்ரங்கநாதன்(26), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு படிப்பை முடித்து விட்டு சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மாதம் 20 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையில், தனேஷூக்கு ஏற்பட்ட சிறு விபத்தில் காயமடைந்தவர், வேலையை உதறி  விட்டு, அரசு பணியில் சேர பயிற்சி பெற்று வந்தார். பின்னர் மற்றொரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அவரது தந்தை ரங்கநாதன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற இவர் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலம் குறித்து மகன் தனேஷிடம் கூறினார். தொடர்ந்து  தந்தையும், தனயனும் இணைந்து தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து சென்னையில் பணியாற்றி வந்த வேலையை உதறி தள்ளி விட்டு விவசாயத்தில் முழு கவனம் செலுத்தினார்.தற்போது 400 மா, தென்னை, கொய்யா மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். மேலும் நிலத்தில் உள்ள பாசன கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்து வரும் இவர் விவசாயத்தில் இயற்கை வளத்தையும், புதுமையும் கலந்து  சாதனை படைக்க விரும்புவதாக கூறினார்.

Related Stories: