நடப்பு ஆண்டில் 200 டிஎம்சிக்கு குறைவாகவே கிடைக்கும் என்பதால் ஒருபோக சாகுபடிக்கு மேட்டூர் அணை ஆகஸ்ட் 2வது வாரத்தில் திறக்கலாம்: மூத்த வேளாண் வல்லுநர்குழு அரசுக்கு பரிந்துரை

தஞ்சை:  நடப்பு ஆண்டில் நீர்வரத்து 200 டிஎம்சிக்கு குறைவாகவே கிடைக்கும் என்று கணிக்கப்படுவதால், பாதுகாப்பாக மேட்டூர் அணையில் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்கு பின் நீர் திறக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.கடந்த 14 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர் குழு வாயிலாக, மேட்டூர் அணை பாசனப்பகுதியில், பல்வேறு நிலைகளை விளக்கி அந்தந்த ஆண்டுகளில் நிகழ்ந்திட்ட  சூழ்நிலைக்கு ஏற்ப  மேட்டூர் அணை  நீர் வழங்கல் திட்டத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்று பல ஆண்டுகளில் அணை திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான (2019 - 2020) நீர் வழங்கல் திட்டத்தை அரசுக்கு அந்த குழு சமர்ப்பித்துள்ளது.  அதில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பைவிட குறைவாகவே கிடைக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையமும் தனியார் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 11ம் தேதியில் இருந்து மழை நீர் கிடைக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அரபிக்கடலில் “வாயு” என்ற புயல் உருவாகி அது வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத்துக்கு வடக்கு-வடமேற்காக சென்று கொண்டிருக்கிறது.

இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தை இந்த புயல் உறிஞ்சி சென்றுவிட்டதால், கிடைக்க வேண்டிய மழை அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய நீரின் அளவும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது இருபோக சாகுபடிக்கு தேவையான 240 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாலும் ஜூலை முதல், ஆகஸ்ட் 15 வரை எந்த ரக நெல்லையும் விதைப்பதற்கு உகந்த காலம் இல்லை என்பதாலும், பாதுகாப்பாக ஒருபோக சாகுபடிக்கு மேட்டூர் அணையை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் திறப்பதே சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதனை மூத்த வேளாண் வல்லுநர்கள் கலைவாணன், வெங்கடேசன், பழனியப்பன், ரவி, கலியமூர்த்தி ஆகியோர் அரசுக்கு தெரிவித்துள்ளனர்.இருபோக சாகுபடிக்கு தேவையான 240 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது

Related Stories: