கப்பு தாங்க முடியலை சாமி... கழிவுநீர் கலந்த ‘கருப்பு குடிநீருடன்’ நகராட்சி ஆணையர் வீடு முற்றுகை

* விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் : விருதுநகரில் சாக்கடை கலந்து கருப்பு நிறத்தில் வந்த குடிநீருடன் பெண்கள் நகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர்  நகராட்சியில் வசிக்கும் 82 ஆயிரம் மக்களுக்கான குடிநீர், ஆனைக்குட்டம்  அணைப்பகுதியில் உள்ள 12 கிணறுகள், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ஒண்டிப்புலி,  காருசேரி குவாரிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில்  நீரேற்றம் குறைந்ததை தொடர்ந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர்  வரத்து பாதியாக குறைந்து விட்டது.

35 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டிய  தாமிரபரணி திட்டத்தில்  15 லட்சம் லிட்டருக்கும் குறைவான தண்ணீரே  கிடைக்கிறது. ஆனைக்குட்டம் பகுதி கிணறுகளில் இருந்து தினசரி 10 லட்சம்  லிட்டரும், ஒண்டிப்புலி குவாரியில் இருந்து 8 முதல் 12 லட்சம் லிட்டரும்  வருகிறது. தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர், 15 நாட்களுக்கு ஒருமுறையே விநியோகிக்கப்படுகிறது. தர்காஸ் தெருவில் கடந்த 3 மற்றும் 11ம் தேதிகளில்  விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், கழிவுநீர் கலந்து வந்தது. மக்கள் எதிர்ப்பை  தொடர்ந்து லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

நேற்று  ராமமூர்த்தி ரோடு கம்மாபட்டியில் உள்ள 500க்கும் மேற்பட்ட  குடியிருப்புகளுக்கு விஎன்பிஆர் பார்க் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் திறந்து விடப்பட்டது.  குடிநீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன்  கழிவுநீர் கலந்து வந்தது. அதிர்ச்சி அடைந்த  பெண்கள் கல்லூரி சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி வீட்டுக்குச் சென்று அவரிடம் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்ததை  தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மாயம்மாள், முருகன் கூறுகையில், ‘‘கம்மாபட்டியில் 10  நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. கடந்த 3 முறையாக ஒரு மணி நேரம்  சாக்கடை கலந்து வருகிறது.

அதன் பின்னர் துர்நாற்றத்துடன் வரும் தண்ணீரை  எப்படி குடிப்பது? கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர் வரி என அனைத்து  வரிகளை வாங்கும் நகராட்சி பாதாளச் சாக்கடை அடைப்புகளை முழுமையாக அகற்றி  சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்’’ என்றனர். நகராட்சி அலுவலர்கள்  கூறுகையில், ‘‘ராமமூர்த்தி ரோட்டில் குடிநீர் குழாய் 8 அடி ஆழத்தில் உள்ளது.  குழாய் பாதித்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. பாதளாச் சாக்கடையில் குப்பைகள்,  பிளாஸ்டிக் பைகள், நாப்கின், துணிகளை மக்கள் போடுவதால் அடிக்கடி அடைப்பு  ஏற்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: