சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுவது போன்று அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுவது போன்று, அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு பதிலடி ெகாடுத்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு சில அமைச்சர்கள் வரவில்லை என்று செய்திகள் வந்துள்ளது. அது தவறான கருத்து. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும், ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், அவர்களுடைய உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் வர முடியவில்லை. இதுகுறித்து தலைமை கழகத்துக்கு முறையாக தகவல் அனுப்பி இருந்தனர். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை குன்னம் ராமச்சந்திரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்று வராதவர்கள், அதற்கான காரணத்தை கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூன்று எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்று கேட்கிறீர்கள். நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடுத்துள்ளார்கள். அந்த வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அழைப்பு அனுப்புவது சரியாக இருக்காது.அதிமுக தலைமை பற்றி சிலர் போஸ்டர் ஒட்டியிருந்தது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என விளக்கம் அளித்து விட்டார். தேர்தலில் அதிமுக கட்சிக்கு வாக்குகள் எங்கெல்லாம் குறைவாக பதிவானதோ அங்கெல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்து, உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் 100க்கு 100 சதவீதம் வெற்றிபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எந்த பிரச்னையும் இல்லாமல் கூட்டம் அமைதியாக முடிந்தது.அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது, தேவையில்லாத ஒரு பிரச்னை. ஒரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (ராஜன் செல்லப்பா) அவரது கருத்தை சொன்னார். அதிமுக கூட்டத்தில் கூட ஒற்றை தலைமையை வலியுறுத்தி எந்த பிரச்னையும் வரவில்லை. பெரிய அளவுக்கு சண்டை வரும், பிரச்னை வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. அதனால் தற்போதுள்ள நிலையே தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: