கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு: ரஷ்ய அதிபர் புதின் அழைத்ததையடுத்து பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதி

பிஷ்கேக்: செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர  மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும்  உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில்  இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார். கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடிக்கு விமான  நிலையில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து ரஷிய  அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, செப்டம்பர் மாதம்  விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின்  அழைப்பு விடுத்தார். ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார் என்று வெளியுறவு செயலாளர்  கோகலே தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா - சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் சீன வங்கியின் கிளையை தொடங்குவது மசூத் அசார் விவகாரம் உள்பட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள  விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

இதற்கிடையே, கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் இறுதியாக இரவு 10 மணியளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும்  மோடி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால்,  மோடி-இம்ரான் சந்திப்பு குறித்து எந்த திட்டமும் இல்லை என இந்தியா தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.

Related Stories: