அதிமுக ஆலோசனை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் பேச தடை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட யாரையும் பேச அனுமதிக்காததால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டம், எந்த பரபரப்பும் இல்லாமல் ஏமாற்றத்துடன் முடிந்ததாக அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் பேச எழுந்தபோது அவர்களை பேச வேண்டாம் என்று அமைதிப்படுத்தி விட்டனர். உள்கட்சி விவகாரங்களை வெளியில் பேசவும் அதிமுகவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை மெகா கூட்டணி என்றும் வெற்றி கூட்டணி என்றும் அழைத்தனர். ஆனால் மக்கள் இந்தக் கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். மக்களவை தேர்தலில் தமிழகம், புதுவையில் நடந்த தேர்தலில் 38 தொகுதிகளில் தோல்வியடைந்தது. தேனி தொகுதியில் மட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

Advertising
Advertising

இதனால் கூட்டணிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தூசி மோகன் எம்எல்ஏ ஆகியோர் பாஜவுடன் அதிமுக சேர்ந்ததால்தான் தோல்வி அடைய நேரிட்டது என்று நேரடியாகவே குற்றம்சாட்டினர். அதேநேரம், பாஜ தலைவர்கள், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததுதான் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கிடையில், மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகனுக்கு இடம் வழங்க மோடி முடிவு செய்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தூண்டி விட்டு, தமிழகத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி ஆதரவாளர்களான ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேட்டி அளித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தலைவர்கள் (எடப்பாடி, ஓபிஎஸ்) இருவருமே தங்களுக்காகத்தான் செயல்படுகின்றனர். மக்களுக்காக செயல்படவில்லை. தொண்டர்களுக்காக செயல்படவில்லை என்று எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பல சந்தர்ப்பங்களில் இதை பகிரங்கமாகவும் பேசி வந்தனர்.

தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சரிக்கட்ட ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்தனர். இதற்காக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்தனர். அதன்படி, 12ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10.23 மணிக்கு வந்தார். இருவரையும் கட்சியின் தொண்டர்கள் வரவேற்றனர். அதில் எடப்பாடி வந்தபோது, அதிமுக கட்சியின் வருங்கால பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் சிலர் கோஷமிட்டனர். இதை கேட்டு, சிரித்தபடி கட்சியின் அலுவலகத்துக்குள் சென்றார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய 3 பேருக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன்அன்சாரி, தனியரசு ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. மற்ற 210 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில் உடல்நிலை சரியில்லாததால் குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரவில்லை. மீதமுள்ள 113 அதிமுக எம்எல்ஏக்களும் (அமைச்சர்கள் உள்பட) கலந்து கொண்டனர். தற்போது போர்க்குரல் எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும், ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வந்த அனைவரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. அழைப்பு கடிதம் இல்லாத யாரும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 5 பேர் மட்டுமே பேசினர். கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி உள்ளிட்ட பலர் பேச எழுந்தனர். ஆனால் அதற்குள் கூட்டம் முடிந்ததாக அறிவித்து விட்டனர்.  தங்கள் கருத்துக்களை மனுவாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் யாரிடமும் கருத்து கேட்காமல் கூட்டம் பாதியிலேயே முடிந்து விட்டது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிந்து விட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரையும் பேச அனுமதிக்காததால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டம், எந்த பரபரப்பும் இல்லாமல் ஏமாற்றத்துடன் முடிந்ததாக அதிமுகவின் 2ம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கென கழக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கழக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும், கழகத்தின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் கழக நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துக்களை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்க இருக்கும் இந்த வேளையில், கழக செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.

மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கழகத்தின் சார்பிலோ அல்லது கழக ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அதிமுகவின் பிரதிநிதிகளைப் போல சித்தரித்து, அவர்களை கழகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம். அத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான செய்திகளை கொண்டுசேர்த்துவிடும் என்பதை மனதில் கொண்டு ஊடகம் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றை தலைமை பற்றி பேசவில்லை

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறும்போது, “தற்போதுள்ள தலைமையின் கீழ் செயல்பட கூட்டத்தில் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும் அதை ஏற்றுக் கொண்டார். கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. ஒற்றை தலைமை குறித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம். சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம்” என்றார்.

எடப்பாடி பொதுச்செயலாளர்

அதிமுக தலைமை அலுவலகத்தை சுற்றிலும், பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக கட்சிக்குள் மோதல் ஏற்படும் வகையில் போஸ்டர் அடிக்கப்பட்டால், அவற்றை உடனடியாக கிழித்து விடுவார்கள். ஆனால் இந்த போஸ்டர் கிழிக்கப்படவில்லை. மேலும் தி.நகர் சத்யா எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அதிகமாக திரண்டிருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது, வருங்கால பொதுச் செயலாளர் எடப்பாடி என்று கோஷங்களை எழுப்பினர்.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்

அதிமுக கட்சியில் தற்போதுள்ள இரட்டை தலைமையை (ஓபிஎஸ், இபிஎஸ்) அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் குரல் எழுப்பினர். அதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்துதான் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. ஆனால், மிகவும் எதிர்பார்ப்போடு வந்த எம்எல்ஏக்கள் யாரையும் பேச கட்சி தலைமை அனுமதிக்கவில்லை. எந்த கோரிக்கையாக இருந்தாலும் மனுவாக அளியுங்கள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பல எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி தர தயக்கம் காட்டுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “எழுத்துப்பூர்வமாக மனுவாக எங்கள் கோரிக்கையை கட்சி தலைமைக்கு எழுதி கொடுத்தால் அதை ஆதாரமாக வைத்து கட்சி தலைமை எங்களை பிற்காலத்தில் மிரட்ட வாய்ப்புள்ளது. மிகவும் எதிர்பார்ப்போடு வந்த நாங்கள், மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம்” என்று கூறினர்.

தண்ணீர் இல்லை, தொண்டர்கள் இல்லை

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரும்போது குறைந்த அளவே தொண்டர்கள் கூட்டம் வருகிறது. நேற்றும் அதேநிலைதான் நீடித்தது. தொண்டர்களைவிட போலீசார், பத்திரிகையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சென்னையில் நேற்று 105 டிகிரிக்கும் அதிக வெயில் கொளுத்தியது. அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்புக்காக வந்த 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு குடிக்க தண்ணீர் வசதி கூட செய்து தரப்படவில்லை.

செல்போன்கள் பறிமுதல்

அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வந்தவர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்ட அரங்கத்திற்குள் செல்லும் நுழைவு வாயிலில், அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி, வாங்கப்பட்ட செல்போன்கள் ஒரு கவரில் பெயர் எழுதி தனித்தனியாக வெளியே ஒரு டப்பாவில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது, கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் செல்போன்களை ஆன் செய்து வைத்து விடுவதாகவும், அதனால் கூட்டத்தில் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பத்திரிகையாளர்கள் ஒட்டு கேட்பதாக புகார் எழுந்ததால்தான் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றனர்.

வாயை அடைக்க ஐஸ்கிரீம்

எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களுக்கு அவ்வப்போது, ஆவினில் இருந்து வந்த ஐஸ்கிரீம், மில்க்சேக் உள்ளிட்டவைகள் சப்ளை செய்யப்பட்டது. அதிக வெயில் காரணமாக இதுபோன்ற பொருட்களை ஆவின் கடைகளில் இருந்து எடுத்து வர பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் பேசாமல், தலைவர்கள் பேச்சை மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கவும், அவர்களது வாயை அடைக்கவும்தான் ஐஸ்கிரீம் சப்ளை செய்யப்பட்டதாக அதிமுக தொண்டர்கள் கிண்டலாக கூறினர்.

Related Stories: