கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கீழ் குண்டாறு கூட்டு குடிநீர்த் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி மூடப்படவில்லை. இதனால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் அண்ணா சாலை, நாயுடுபுரம் சாலை, பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை, ஆனந்தகிரி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வந்தனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சாலைகளை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதனை கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,‘‘ரூ. 10 லட்சம் செலவில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். இந்தப் பணிகள்  ஓரிரு வாரங்களுக்குள் முடிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: