திருவல்லிக்கேணி குடோனில் பதுக்கிய 10 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை: திருவல்லிக்கேணியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தி.நகர் உஸ்மான் சாலை, நியூ போக் சாலை சந்திப்பில் கடந்த 8ம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் சுற்றி வந்த நபரை, மாம்பலம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சைதாப்பேட்டையை ேசர்ந்த நிஷானுதீன் (31) என்று தெரியவந்தது. அவரிடம் இருந்து 19 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர் அளித்த தகவலின்படி தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி திருவல்லிகேணி மல்லன் பொன்னப்பன் தெரு, ஷேக் தாவூத் தெருவை சந்திப்பில் வேணுகோபால் என்பவருக்கு சொந்தமாக குடோனில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 10 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெளி மாநிலத்தில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, இந்த குடோனில் பதுக்கி, சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. பின்னர் குடோன் உரிமையாளர் வேணுகோபாலை கைது செய்தனர்.

2 லட்சம் செம்மரக் கட்டை சிக்கியது

புழல் காவாங்கரை மீன் மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் இரவு புழல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள சர்வீஸ் சாலையில் சென்றபோது, போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தோளில் இருந்த கோணிப்பையை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார், அந்த கோணிப்பையை சோதனை செய்தபோது, 30 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு 2 லட்சம். அந்த கட்டைகளை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர், இதுபற்றி திருவள்ளூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: