வருமான வரித்துறையில் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டு 12 மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ்

புதுடெல்லி: வருமான வரித்துறையில் 12 மூத்த அதிகாரிகளை நேற்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஊழல், முறைகேடு, பாலியல் தொல்லை, சொத்துக் குவிப்பு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எழுத்துள்ளது. இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் 12 மூத்த அதிகாரிகளை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நிதியமைச்சக விதி 56ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் முதன்மை ஆணையர், ஆணையர் பதவிகளில் உள்ளவர்கள். இவர்களில் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு மற்றும் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன என்றனர். மத்திய அரசின் விதி எண் 56ன் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துள்ளார். நிர்வாகத்தில் தூய்மையை பராமரிப்பதற்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

டிஸ்மிஸ் ஏன்?

* சர்ச்சைக்குரிய சாமியார் சந்திரசாமியுடன் தொடர்புடைய தொழிலதிபர்களுக்கு முறைகேடாக உதவி, ஊழல் குற்றச்சாட்டில் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரி. நொய்டாவில் ஐஆர்எஸ் அதிகாரி ஆணையர் (மேல்முறையீடு) பதவியில் உள்ள அதிகாரி. அதே அலுவலகத்தில் பணியில் இருந்த ஐஆர்எஸ் பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.17 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக மற்றொரு ஐஆர்எஸ் அதிகாரி கட்டாய ஓய்வில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* இதுபோல் பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள், போலி நிறுவனங்கள் வழக்கில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கி தொழிலதிபரை விடுவித்த குற்றச்சாட்டுகளுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: