கஜா புயல் மரங்களை காவு வாங்கிவிட்டதால் வேதாரண்யம் தாலுகாவில் முந்திரி உற்பத்தி பாதிப்பு: விவசாயிகள் கவலை

வேதாரண்யம்: வேதாரண்யம்  பகுதியில் கஜா புயலில் தப்பி பிழைத்த முந்திரி மரங்கள் தற்போது காய்க்க  துவங்கி உள்ளது. போதுமான அளவு உற்பத்தி இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வேதாரண்யம் தாலுகா முழுவதும் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில்  முந்திரி மரங்கள்  பெரும்பாலானவை சாய்ந்தது.  இப்பகுதியில் ஆயிரக்கணக்கான  ஏக்கரில் உள்ள பணபயிர்களான மா, தென்னை, முந்திரி, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.   இதனால் விவசாயிகள்  வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்திற்கு வழி இல்லாத நிலையில் உள்ளனர். வேதாரண்யம் தாலுகாவில் செட்டிபுலம், கரியாப்பட்டினம், வெள்ளப்பள்ளம், செம்போடை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகளின் ஆண்டு வருமானத்திற்கு முந்திரி ஒரு முக்கிய காரணமாகும். கஜா புயலால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த முந்திரி மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டது. புயலில் தப்பிய சில மரங்கள்  தற்போது  காய்க்க துவங்கி உள்ளது. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த முந்திரிக்கொட்டைகள் சென்ற ஆண்டு கிலோ ரூ.120 முதல் 150 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மிக குறைந்த அளவில் முந்திரி காய்த்திருந்தாலும் அதற்கு சரியான விலை இல்லை. தற்போது கிலோ ரூ.80க்கு  மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே முந்திரி விவசாயத்தின்  வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து முந்திரி வியாபாரி ரெத்தினவேலு கூறியதாவது:  வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் முந்திரி மரங்கள் அனைத்தும்  சாய்ந்துவிட்டது. இருக்கும் மரங்கள் ஓரளவு காய்த்தாலும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முந்திரி கொட்டை வரவில்லை. இதனால்  விவசாயிகளுக்கு போதுமான வருமானம் இல்லை.

Related Stories: