திருவண்ணாமலையை திணறடிக்கும் தண்ணீர் பஞ்சம் 1,856 ஏரிகள் சொட்டு நீரின்றி வறண்டன

* 1.80 லட்சம் கிணறுகளும் வற்றிய பரிதாபம்

* காசு கொடுத்து குடிநீர் வாங்கும் பொதுமக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,856 ஏரிகளும், 1.80 லட்சம் கிணறுகளும் சொட்டு நீரின்றி வறண்டு போனதால் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை பெரிதாக வெடித்துள்ளது. விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நம்பியிருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில், சுமார் 80 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்துள்ளனர். இம்மாவட்டத்தில் பருவமழையும் பொய்த்து போனதால் தொடர்ந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியின் கோரத்தாண்டவத்தால்  விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்ைத மட்டுமே நம்பி வந்த மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வறட்சி விவசாயத்தை மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. பொதுமக்கள் குடிநீருக்காக போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குடிநீர் தேவைக்கும், விவசாய பயிர்களை காப்பாற்றவும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆற்று நீர், ஏரிப்பாசனத்தை மட்டுமின்றி கிணற்று பாசனத்தையும் அதிகம் நம்பி விவசாயம் செய்து வந்தனர். கிணற்று  பாசனத்தை நம்பி கரும்பு, நெல் மற்றும் வாழை, கரும்பு என பயிரிட்டிருந்த  விவசாயிகள் பெரும்பாலானவர்கள் போதிய தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் பயிர்களை கால்நடைகளை கட்டி மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மலர் சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகள்  செடிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தண்ணீர் விலை  கொடுத்து வாங்கி வந்து செடிகளுக்கு பாய்ச்சுகின்றனர். இத்தகைய கடினமான சூழ்நிலையால் விவசாயிகள் வருமானத்துக்கு வழியின்றி, பெற்றக் கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது என்பது தெரியாமல் வேதனையில் தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வயிற்றுப்பசியை போக்க நூறு நாள் வேலை திட்டம், கால்நடை வளர்ப்பு, கட்டிட வேலைக்கும், செங்கல் சூளை வேலைக்கும் சென்று வருகின்றனர். அதோடு மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 600 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 1,256 ஏரிகளும் என மொத்தம் 1,856 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது தண்ணீரின்றி வறண்டு போய் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகின்றன. இந்த ஏரிகள் போதிய மழை இல்லாதததால் இதுவரை முழுமையாக நிரம்பியது கிடையாது என்கின்றனர் விவசாய சங்கத்தினர். மாவட்டத்தில் ஏரிப் பாசனத்தை சார்ந்துள்ள விவசாய நிலத்தின் பரப்பளவு 26 ஆயிரத்து 824 ஹெக்டர் ஆகும். தற்போது, ஏரிகள் வறண்டு போனதால் இதனை சார்ந்துள்ள விவசாய நிலங்கள் வறண்டு போயுள்ளன. அதேபோல், மாவட்டம் முழுவதும் 1.86 லட்சம் விவசாய பாசன கிணறுகள் உள்ளன. இத்தகைய பாசன கிணறுகளை மட்டுமே நம்பியுள்ள விவசாய நிலத்தின் பரப்பளவு 1 லட்சத்து 56 ஆயிரத்து 424 ஹெக்டர் ஆகும்.

தற்போது நிலத்தடி நீரும் வற்றி, கிணறுகளும் வறண்டு, விவசாய நிலங்களும் வறண்ட பூமியாகவே காட்சியளிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையின் போதும், பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை.  இதற்கு காரணம் நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளும், தூர்ந்து போன கால்வாய்களும்தான் என கூறுகின்றனர் விவசாயிகள். எனவே, இனி வரும் காலங்களில் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீரை தேக்க, ஏரியையும், ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

கால்வாய்களை தூர்வார வேண்டும்

விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் இந்த மாவட்டம். போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏரி, குளங்களில் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு போயுள்ளது. இந்த மாவட்டம் அதிகளவில் கிணற்று பாசனத்தையே நம்பியுள்ளது. ஏரிகள், குளங்கள் வற்றி விட்டதால் விவசாய கிணறுகளும் வறண்டு போயுள்ளது. நீர்நிலை பகுதிகளுக்கு மழை காலங்களில் தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த கால்வாய்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. நீர்வரத்துக்கால்வாய்கள், பாசன கால்வாய்கள் என அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. நீர்நிலை பகுதிகளுக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

புகார் தெரிவித்தால் நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரி பேட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என புகார் வந்தது. அத்தகைய ஆக்கிரமிப்புகள் பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. இருப்பினும், ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு, சில கிராமங்களில் விளைநிலங்களுக்கு அருகாமையில் உள்ள ஏரி பகுதியினை ஒரு சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்தல் போன்றவை குறித்து புகார் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர்நிலை பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள், விவசாயிகள் ஏரிக்கால்வாய் மற்றும் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(இஇ) முரளிதரன் தெரிவித்தார்.

Related Stories: