கடலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியிடம் மனு வாங்க போலீசார் மறுப்பு

கடலூர்: திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் பிரித்திவிராஜ்(25). இவரது மனைவி ஜீவிதா(20) கடலூர் எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6ம் தேதி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். 7ம் தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டோம். இந்நிலையில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவரையும் பிரிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

ஆகையால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.இந்நிலையில் மனுவை படித்து பார்த்த எஸ்பி அலுவலக காவல் அதிகாரிகள், காதல் ஜோடியினர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்பதால் அங்குள்ள மாவட்ட போலீசில் மனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி மனுவை திருப்பி அளித்தனர். நாங்கள் கடலூரில் திருமணம் செய்து கொண்டோம், மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மனுவை பெற்று நடவடிக்கை எடுக்க உதவிட வேண்டும் என காதல் தம்பதியினர் கோரினர். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் மனு அளிக்க வேண்டும் என்று அவர்களை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories: