சோழவந்தானில் ரயில்வே கேட்டில் உள்ள தேன் கூட்டால் மக்கள் அவதி

சோழவந்தான்: சோழவந்தான் ரயில்வே கேட்டில் மேலே உள்ள ராட்சத தேனீக்கள் பொதுமக்களை விரட்டி விரட்டிக் கொட்டுவதால் தினமும் அலறி ஓடும் நிலை தொடர்கிறது. சோழவந்தானில் வாடிப்பட்டி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக கனரக வாகனங்களை தவிர டூவீலர், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் இவ்வழியே சென்று வருகிறன. தினமும் அறுபதுக்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே சென்று வருகிறது.

இந்நிலையில் வடக்குப் பகுதி ரயில்வே கேட்டின் மேலே உள்ள இணைப்பு பாலத்தின் கீழ் பகுதியில் சில மாதங்களாக ராட்சத தேனீக்கள் பெரிய கூடு கட்டியுள்ளது. மற்ற நேரத்தில் அமைதியாக இருக்கும் இந்த தேனீக்கள்,அதிவேகத்தில் ரயில் செல்லும் போது அதிர்வினால் கலைந்து ரயில்வே கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை விரட்டிக் கொட்டுகிறது. இதனால் கேட் மூடிய போது நீண்ட வரிசையில் நெரிசலில் காத்திருக்கும் பொதுமக்கள், குழந்தைகள் தப்பி ஓட வழியின்றி தேனீக்களின் தாக்குதலால் அலறித் துடிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` இந்த ராட்சத தேனீக்களை அப்புறப்படுத்தும்படி சோழவந்தான் ரயில் நிலைய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தீயணைப்பு துறையினரிடம் தகவல் கூறினால், இதன் அருகில் ரயில் இயங்குதலுக்குரிய உயரழுத்த மின்சார வயர்கள் செல்வதால், ரயில்வே துறையினர் முறையான அனுமதி அளித்த பின் தான் இதை எடுக்க இயலும் என்கின்றனர். இங்கு பெரும்பாலும் வடமாநிலத்தவர் ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பதால் நாம் எந்த புகார் கூறினாலும், அவர்களுக்கு புரிவதில்லை. எனவே, ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ராட்சத தேனீக்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: