வேலூர் அருகே டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: உரிமையாளர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட பொருட்காட்சியில் டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் இந்த பொருட்காட்சியை நடத்தியவர்.

ரம்ஜானை முன்னிட்டு அமைக்கப்பட்ட இந்த பொருட்காட்சிக்கு வாணியம்பாடி காவாக்கரையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணு நேற்றிரவு சென்றான். டிராகன் ரயிலில் ஏறுவதற்கு ஆசைப்பட்ட அவன், அதற்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, படிக்கட்டில் ஏறி நின்றுள்ளான். அப்போது படிக்கட்டில் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆர்வத்தில் மிக அருகே சென்ற விஷ்ணு, வேகமாக இயங்கிக் கொண்டிருந்த டிராகன் ரயில் மோதி, சக்கரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டான்.

இதில் அவனுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் கொட்டியது. அங்கிருந்தவர்கள் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் செல்லும் வழியிலேயே விஷ்ணு உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு, அவனது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்த பொருட்காட்சியானது உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மின்சார வயர்கள் மிகவும் ஆபத்தான முறையில் தரையில் போடப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. பொருட்காட்சி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை என பல துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பொருட்காட்சியை நடத்த உரிமம் பெற்றிருக்கும் பார்த்திபன், எங்குமே அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். அதேசமயம் டிராகன் ட்ரெயினின் உரிமையாளரான மனோகரன் என்பவரை, வாணியம்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: