தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி: தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பருவ நிலை மாற்றம் வரும்போது நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை. நிபா வைரஸ் போன்ற வைரஸ்கள் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், உள்ளிட்ட கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சிறப்பு மருத்துவக்குழுவினர் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த நடவடிக்கைகளை தீவிரமாக எடுப்பது குறித்து சுகாதார துறைக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். எனவே பொதுமக்கள் பீதிஅடைய வேண்டாம் என்றார்.

Related Stories: