திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் இறப்பதை தடுக்க தண்ணீரின் தன்மையை மேம்படுத்த முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் இறப்பதை தடுக்கும் வகையில் தண்ணீரின் தன்மையை மேம்படுத்தும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்மதீர்த்தம், 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்த குளங்கள் உள்ளன. இவற்றில் இருந்த மீன்கள் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென ஆயிரக்கணக்கில் செத்து மிதந்தன. இவற்றை ஆய்வு செய்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி ஆகியோர் தண்ணீர் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பினர். மேலும், மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் நல பொறியாளர் (ஓய்வு) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் அக்பர், சுகாசினி ஆகியோரும் ஆய்வு நடத்தினர். அதில், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்தது தெரியவந்தது.

இவர்கள் தெரிவித்த திட்ட அறிக்கையின்பேரில் குளங்களின் தண்ணீர் தரத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.  அதன்படி பாக்டீரியாஸ், சூடோமோனோஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நுண்ணுயிர் கலவைகள் மற்றும் நீர்நிலை தாவரங்கள், வெட்டிவேர், கல்வாழை போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரின் தரத்தை மேம்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், சுற்றுச்சூழல் நலப் பொறியாளர் ராஜசேகரன் கூறியதாவது: அண்ணாமலையார் கோயிலில் உள்ள 2குளங்களின் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல.  ஆனால் நீர்வாழ் உயிரினங்கள் வாழலாம்.

சமீபத்தில் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்தன. எனவே, தண்ணீரின் தரத்தை மேம்படுத்தி, நீர்வாழ் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் குளங்களில் ஏற்கனவே இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டு வெற்றியடைந்தது. என்றார்.

Related Stories: