விரைவில் கல்விக்காக தொலைக்காட்சி தொடங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : நீலகிரி மாவட்டத்தில் 4 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்சட்டிப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்வதாக குறிப்பிட்டார். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டுகள், மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன என்றும் கல்விக்காக தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார். முன்னாள் மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.82 கோடி நிதியுதவி வழங்கியதில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். வெய்ட்டேஜ்க் முறையில் பணி வாய்ப்பை இழந்தவர்கள் , 2013 -2014ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்ற 82,000 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கும் நிலையில், அரசு தற்போது இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

Related Stories: