மலிவு விலை நாப்கின் மிஷின் கண்டுபிடித்தவர் பிளஸ் 2 பாடத்தில் இடம் பிடித்த கோவை முருகானந்தம்

கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கடந்த 2000ம் ஆண்டு மலிவு விலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். தொடர்ந்து சானிடரி நாப்கின் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவரது சேவையை பாராட்டி கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பேட்மேன் என்ற இந்தி படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முருகானந்தம் குறித்த தகவல்கள் நடப்பாண்டு பிளஸ்2 உயிர் விலங்கியல் பாடபுத்தகத்தில், ‘மனித இனப்பெருக்கம்’ என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து முருகானந்தம் கூறியதாவது:  தனிநபர் ஆய்வு என்ற வகையில், கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் என்னை பற்றிய தகவல்கள் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  நாம் படித்த காலகட்டத்தில் கண்டுபிடிப்பாளர்கள் என்றாலே வெளிநாட்டவர்களின் முகங்கள்தான் இருக்கும். இதை படிக்கும்போது, தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் பாடம் இடம்பெற்றுள்ளதை பார்க்கும் மாணவர்கள், வரும் காலத்தில் நம்மாலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிட முடியும் என்ற மனோதைரியம் கிடைக்கும்.  இதன்மூலம் இளைஞர்கள் கண்டுபிடிப்பாளர்களாக உருவெடுக்கும் உத்வேகத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. தற்போது மாதவிடாய் தொடர்பான பாடங்களை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் படிக்க முடியும். இதனால், ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும் என்ற புது நம்பிக்கை பிறக்கும். இவ்வாறு முருகானந்தம் கூறினார்.

Related Stories: