மதகுகளின் இயக்கம், கசிவுநீர் அளவு மிகத்துல்லியம் பெரியாறு அணை பலமாக உள்ளது

கூடலூர்: பெரியாறு அணையில் ஆய்வு செய்த கண்காணிப்பு குழு தலைவர், ஆய்வுக்குப்பின் அணை பலமாக உள்ளதாக தெரிவித்தார். பெரியாறு அணை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். முன்னதாக குழு தலைவர் குல்சன்ராஜ், தமிழக பிரதிநிதி பிரபாகரன் தமிழக அதிகாரிகளுடன் வல்லக்கடவு வனப்பகுதி வழியாக ஜீப்பில் அணைப்பகுதிக்கு வந்தனர். கேரள பிரதிநிதி அசோக், கேரள அதிகாரிகளுடன் தேக்கடியிலிருந்து கேரள வனத்துறை படகு மூலம் அணைக்கு வந்தார். பின் மெயின் அணை, பேபி டேம், கேலரிப்பகுதி, மதகுப்பகுதியை ஆய்வு செய்தனர்.  கேரள அதிகாரிகளின் வேண்டுகோளின்படி மதகுப்பகுதியில் முதல் மதகு இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதில் அதன் இயக்கம் சீராக இருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அணையின் நீர் கசிவையும் சோதனை செய்தனர். இந்த ஆய்வின்போது முதன்மை பொறியாளர் கிருஷ்ணன், காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், துணைக்குழு தலைவர் சரவணபிரபு, பெரியாறு அணை செயற்பொறியாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை குமுளியிலுள்ள கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் குழு தலைவர் குல்சன்ராஜ் அளித்த பேட்டி: பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையின் கசிவுநீர் (சீப்பேஜ் வாட்டர்) அணையின் தற்போதைய நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. வல்லக்கடவு பாதை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அது வாகன போக்குவரத்துக்கு தகுதியானதாக இல்லை. கேரள அரசு இதை சீரமைக்கவேண்டும். பேபி அணையை பலப்படுத்துவதற்கு அணைப்பகுதியில் உள்ள சில மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கான அனுமதியை பெற இருமாநில அரசுகளும் சுமுகமாக பேசி நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். அணைக்கு மின் இணைப்பு கொண்டுவருவதற்கான செயல்பாடு நடைமுறையில் உள்ளது. அதற்கான அனுமதியை கேரள மின்வாரியம் வழங்கவேண்டும்.  கார் பார்க்கிங் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் தான் இதுகுறித்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றார்.

Related Stories: