சுதாகர் ரெட்டி பதவி விலகுகிறார் இந்திய கம்யூ.க்கு புது பொதுச்செயலாளர்

ஐதராபாத்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சுதாகர் ரெட்டி பதவி விலக முடிவு செய்துள்ளதால், புதிய பொதுச்செயலாளர் அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால், அந்த கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இரு கட்சிகளையும் இணைத்தால் மட்டுமே எதிர்காலம் இருக்கும் என்பதால், இதற்கான முயற்சிகளை இருகட்சிகளும் எடுத்து வருகின்றன. இது பற்றி மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பாக கருதப்படும் பொதுச் செயலாளர் பதவியில், சுதாகர் ரெட்டி கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 3வது முறையாக இந்த பொறுப்பை ஏற்ற அவருடைய பதவிக்காலம் வரும் 2021 ஆண்டுடன் முடிகிறது. இந்நிலையில், தனது உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் சுதாகர் ரெட்டி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் 20ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், தனது ஓய்வு அறிவிப்பை சுதாகர் ரெட்டி வெளியிட உள்ளார். இதனால், அந்த பதவிக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் சங்க பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர், கட்சியின் கேரளா பொதுச்செயலாளர் கன்னம் ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.

Related Stories: