இந்திய தூதரகம் நடத்திய இப்தார் விருந்துக்கு வந்தவர்களிடம் கெடுபிடி

* பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகாரிகள் அத்துமீறல்

* போன் செய்தும் மிரட்டல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய தூதரகம் நடத்திய இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகள் அதிகளவில் தொல்லைகள்  கொடுத்தனர். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், ஒவ்வொரு ஆண்டும் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதற்காக, பாகிஸ்தானில் உள்ள முக்கிய பிரமுகர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுவர். இந்த ஆண்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஓட்டலில் இப்தார் விருந்து நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இதில், கலந்து கொள்ளும்படி பலருக்கு, இந்திய தூதர் அஜய் பிசாரியா அழைப்பு விடுத்தார். இதை முன்னிட்டு, அந்த ஓட்டலை சுற்றி வழக்கத்தை விட அதிகளவில் பாதுகாப்பு போப்பட்டது. அப்போது, விருந்துக்கு வந்தவர்களிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மாறி, மாறி விசாரித்து தொல்லைகள் கொடுத்தனர்.  இது குறித்து நிருபர் ஒருவர் கூறுகையில், ‘‘எனது அழைப்பிதழை பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் சரிபார்த்தனர். அதன்பின் எனது வேலை, தங்கியிருக்கும் இடம் தொடர்பாக பல கேள்விகள் கேட்டனர். அதன் பிறகே என்னை அனுமதித்தனர்,’’ என்றார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் பரஹதுல்லா பாபர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்திய தூதரகம் நடத்திய இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். நான் ஓட்டலுக்குள் சென்று விசாரித்துக் கொள்கிறேன் என் கூறியதும், வேறு நுழைவாயில் வழியாக செல்லும்படி கூறினார். அந்த நுழைவாயிலும் மூடப்பட்டது. மீண்டும் முன்வாயில் வழியாக செல்லும்படி கூறினா். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை,’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விருந்துக்கு அழைக்கப்பட்ட பலரை, மர்மநபர்கள் போன் செய்து மிரட்டியுள்ளனர். இந்த இடையூறுகளையும் மீறி ஒரு சிலர் மட்டுமே விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசிய இந்திய தூதர், ‘‘பல சிக்கல்களை சந்தித்து இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’’ என்றார். பாலகோட் தாக்குதலுக்குப்பின் இருதரப்பு உறவு மோசமானதால், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

விமானங்கள் பறக்க தடை நீக்கம் இந்தியா முடிவுக்கு காத்திருக்கிறோம்:

பாகிஸ்தானின் பாலகோட் மீது கடந்த பிப்ரவரி 27ம் தேதி இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இருநாடுகளும் தங்களின் வான் எல்லையில் வெளிநாட்டு பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதித்தன. சில தினங்களுக்கு முன் இந்த தடையை நீக்கிவிட்டதாக இந்திய விமானப்படை தனது டிவிட்டரில் தெரிவித்தது. இதனால், பாகிஸ்தானும் தனது தடையை நீக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே உள்ள தெலம் என்ற பகுதியில் விதிக்கப்பட்ட வான்வெளி தடையை 2 மாதங்களுக்கு முன்பே நீக்கிவிட்டோம். அப்பகுதியில் இந்தியாவும் தனது தடையை நீக்க வேண்டும். மற்ற இடங்களில் தடையை நீக்கி விட்டதாக, இருநாடுகளுக்கும் இடையே இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாறப்படவில்லை. மேலும், 10 இந்திய வான் வழித்தடங்களில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை இந்திய அரசு நீக்கினால், அதேி நடைமுறையை நாங்களும்  பின்பற்றுவோம். இதற்காக, இந்தியாவின் முடிவுக்காக காத்திருக்கிறோம்,’’ என்றார். 

Related Stories: