பராமரிப்பு பணிக்காக பழநி மலைக்கோயில் வின்ச் 45 நாட்கள் நிறுத்தம்

பழநி: பராமரிப்பு பணி காரணமாக பழநி மலைக்கோயிலில் 1ம் எண் வின்ச் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. பழநி கோயிலில் முதல் வின்ச் 1966ம் ஆண்டு, 2வது வின்ச் 1981ம் ஆண்டு, 3வது வின்ச் 1988 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பயண நேரம் 8 நிமிடம். ஒரே முறையில் 36 பேர் வரை பயணிக்கலாம். தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.

மழை மற்றும் பலத்த காற்று காலங்களில் கூட நிறுத்தப்படாமல் இயக்கப்படும் வின்ச் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 1ம் எண் வின்ச் நாளை (திங்கள்) முதல் நிறுத்தப்படுகிறது. வின்ச் பெட்டி சீரமைப்பு, தண்டவாள பராமரிப்பு, கயிறு மாற்றம், ஷாப்ட் பழுது நீக்குதல் போன்ற பணிகள் நடைபெறும். இதனால் சுமார் 45 நாட்களுக்கு 1ம் எண் வின்ச் இயக்கப்படாது என்றும், 2 மற்றும் 3ம் எண் வின்ச் வழக்கம்போல் இயக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: