மாநிலங்களவை எம்பி பதவி வேண்டும் அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா போர்க்கொடி: இபிஎஸ், ஓபிஎஸ் அதிர்ச்சி

ராமநாதபுரம்: மாநிலங்களவை எம்பி பதவி தர வேண்டும் என மாஜி எம்பி அன்வர்ராஜா திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் அதிமுகவிற்கு 3 எம்பிகள் தேர்வு செய்யப்படும் நிலையில், மாநிலங்களவை எம்பி பதவி கேட்டு அதிமுகவில் பலர் கட்சி தலைமையிடம் மனு அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர்ராஜா தனக்கும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அன்வர் ராஜா கூறியதாவது:

நடந்து முடிந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி எனக்குத்தான் என கூறினர். கூட்டணி கட்சியான பாஜவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன். தென்மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறாது என மதுரை, தேனி தொகுதி தவிர அனைத்து தொகுதியும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் தென்மாவட்டங்களில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் எனக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்க வேண்டும்.

அதிமுகவில் முஸ்லீம்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என நிலவிவரும் கருத்தை மாற்றவும் எனக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆகியோரிடத்தில் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவில் பலரும்.பாமகவும் ராஜ்யசபா எம்பி பதவி கேட்டு வரும் நிலையில், அன்வர்ராஜாவும் எம்பி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளது இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: