முதுகலை, முனைவர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண் பல்கலை அறிவிப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டயப்படிப்புகளை படிக்க விரும்புவோர் நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இவ்வாண்டு முதுகலை பட்டப்படிப்பில் 33 துறைகளிலும், முனைவர் பட்டப்படிப்பில் 29 துறைகளிலும் மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கை இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேளாண்மைக் கழகத்துடன் கூடிய மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருக்கும் வேளாண் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மட்டும் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டய படிப்புகளுக்கு தகுதியுடையவர்கள்.

இணையதளம் மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜூலை மாதம் 23ம் தேதி முதுகலைக்கும், ஜூலை 30ம் தேதி முனைவர் பட்டயப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 0422-6611261, 6611461, என்ற தொலை பேசி எண்களிலும், //www.tnau.ac.in/pgadmission.html என்ற இணையதள முகவரியையும் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: