சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே வாரிய தலைவரிடம் டி.ஆர்.பாலு எம்.பி கோரிக்கை

சென்னை: சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவை சந்தித்து டி.ஆர்.பாலு எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை-மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும்.

அப்படி இந்த ரயில் நின்று செல்லும் பட்சத்தில் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் அதிகம் பயனடைவார்கள். ஏனென்றால், தாம்பரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்வோர் இங்கு அதிகளவில் உள்ளனர். இது சாத்தியமாகும் பட்சத்தில் இந்த ரயிலுக்காக புறநகர் பகுதிகளில் இருந்து எழும்பூருக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. இதுதவிர போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. நேரமும் மிச்சமாகும். எனவே தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு அளித்துள்ள கோரிக்கையை ஏற்று, விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ்  தெரிவித்துள்ளார்.

Related Stories: