தர்மபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி தோல்விக்கு அதிமுக காரணமா?

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி தோல்விக்கு அதிமுகவினர் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. தர்மபுரி தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தோல்வி அடைந்தார். அவர் 97,944 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். மற்ற தொகுதிகளில் எல்லாம் 2, 3, 4 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். தர்மபுரி தொகுதியில் செந்தில்குமார் (திமுக) - 5,20,114, அன்புமணி (பாமக) - 4,22,170, பழனியப்பன் (அமமுக) - 45,860, ருக்மணிதேவி (நாம் தமிழர்) - 17,554, ராஜசேகர் (மய்யம்) - 14,046, நோட்டா - 12,167 வாக்குகள் பெற்றனர். தர்மபுரி தொகுதியில் அதிமுகவினர் பலரும் பாமகவுக்கு வாக்களிக்காமல் மாற்று கட்சிகளுக்கு வாக்களித்ததே அன்புமணி தோல்விக்கு காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாமகவின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தொகுதியுடன் 22 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. அதன்படி, எங்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இரண்டு தேர்தலிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வாங்கிய ஓட்டு விவரம் தற்போது தெரியவந்துள்ளது.அதன்படி தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டியில் அதிமுக 1,00,974 வாக்குகளும், திமுக 83,165 வாக்குகள் வாங்கியுள்ளது. அதேநேரம் இந்த சட்டமன்ற தொகுதியில் எம்பி தொகுதிக்கான தேர்தலில் பாமகவுக்கு 94,029 வாக்குகளும், திமுகவுக்கு 91,332 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதேபோன்று, அரூர் தொகுதியில் அதிமுகவுக்கு 85,562 வாக்குகளும், திமுகவுக்கு 75,683 வாக்குகளும் விழுந்துள்ளது. அன்புமணிக்கு அரூர் சட்டமன்ற தொகுதியில் 65,072, திமுகவுக்கு 98,327 வாக்குகள் விழுந்துள்ளது. இந்த இரண்டு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது.

அதேபோன்று, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதியான பாலக்கோட்டில் அன்புமணிக்கு 75,529 வாக்குகளும், திமுகவுக்கு 97,927 வாக்குகளும், மேட்டூர், பென்னாகரம், தர்மபுரி சட்டமன்ற தொகுதியிலும் பாமகவுக்கு திமுகவுடன் குறைந்த வாக்குகளே விழுந்துள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது, தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பலர் பாமகவுக்கு வாக்களிக்கவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதே நேரம் 2 இடைத்தேர்தலில் பாமக ஓட்டு அதிமுகவுக்கு அதிகளவில் விழுந்துள்ளது. அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனை, கூட்டணி சேருவதற்கு சில மாதங்களுக்கு முன் ஆண்மை இல்லாதவர் என்று அன்புமணி விமர்சனம் செய்தார். இதனால் அன்பழகன் ஆதரவாளர்கள் பாமகவை பழிவாங்கி விட்டனர். அதேபோன்று மேட்டூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ செம்மலையும் பாமகவுக்காக வேலை செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதிமுகவினர் திட்டமிட்டு எங்கள் (பாமக) வேட்பாளரை தோற்கடித்து விட்டனர். இதுபற்றி கட்சி தலைமைக்கு (ராமதாஸ்) தெரிந்திருந்தாலும், அதிமுக சார்பில் அன்புமணிக்கு மாநிலங்களவை எம்பி சீட் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த விஷயங்களை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் கட்சி தலைமை தவித்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்களவை எம்பி சீட் கிடைக்காவிட்டால், அதிமுகவுக்கு நாங்கள் வரும் தேர்தலில் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றனர்.

Related Stories: