ராகுல் ராஜினாமாவை கைவிட கோரி காங்கிரஸ் ஆர்டிஐ பிரிவு உண்ணாவிரதம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியை தழுவியது. அதற்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை சோனியா காந்தியிடம் கொடுத்த போது, காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார். பின்னர் கூடிய காரியக்கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டது. அவரே தலைவராக தொடர்வார் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினர்.  

இந்சூழ்நிலையில், நேற்று டெல்லியில் ராஜினாமா வேண்டாம் என வலியுறுத்தி ராகுல்காந்தி வீடு முன்பு காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். இதை தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஆர்டிஐ பிரிவு சார்பில் ராகுல்காந்தி தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதம் இருந்தனர். காலை முதல் மாலை வரை தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தலைவர்களும் இணைந்து ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது என்று வலியுறுத்தினர்.

Related Stories: