காசு கொடுத்து பொருள் வாங்குவது குறையும் இனி எல்லாம் இ-பணபரிவர்த்தனை தான்

புதுடெல்லி: காசு கொடுத்து இனி பொருட்களை வாங்க  முடியுமா என்பது சந்தேகம் தான். எல்லாரிடமும் எதை வாங்கினாலும் கார்டு இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், இ வாலெட் மூலம் பணம் செலுத்த வேண்டும். மின்னணு பரிவர்த்தனை (இ பணப்பரிவர்த்தனை)யில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அதிரடியாக அறிவிக்கப்பட்டு, 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பாஜ அரசு அறிவித்தது. இரவோடு இரவாக பலரும் தங்களின் பணத்தை மாற்றினர். மாதக்கணக்கில் வங்கிகளில் பெரும் வரிசையில் நின்று இந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக்கொண்டனர். இதனால் பலருக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், மத்திய அரசு குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் பணமாக வைத்திருக்க கூடாது; பணபரிவர்த்தனை செய்யக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதன்படி, மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவித்தது. பேடிஎம், யுபிஐ பீம் ஆப் மற்றும் வங்கிகளின் ஆப்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதை ஊக்குவித்து வருகிறது. மேலும், இதற்கு ஏற்ப டெபிட், கிரெடிட் கார்டுகள் புழக்கத்தையும் அதிகரிக்க துவங்கின வங்கிகள். கடந்த மார்ச்சுடன் முடிந்த நிதி ஆண்டில் 3000 ஆயிரம் கோடி முறை இ பணபரிவர்த்தனை நடந்துள்ளது. மக்கள் அந்த  அளவுக்கு தங்களின் தேவைகளுக்கு, பொருட்கள் வாங்குவதற்கு ஆன்லைன் மூலமும், ஆப்கள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்துள்ளனர். இந்த இலக்கை இன்னும் அதிகரித்து வரும் 2020 மார்ச்சுடன் முடியும் நிதி ஆண்டில் 4000 கோடி அளவுக்கு இ பரிவர்த்தனை நடக்க வேண்டும்; அதற்கு ஏற்ப வங்கிகள், பேடிஎம் போன்ற ஆப்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

பல்வேறு துறைகளிலும் ரூபாய் நோட்டு மூலம் நடக்கும் பணபரிவர்த்தனையை இ பணப்பரிவர்த்தனையாக மாற்றும்படி, செபி, ரிசர்வ் வங்கி உட்பட அரசு அமைப்புகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் பெருகி வரும் நிலையில், காசு கொடுத்து பொருட்கள் வாங்கும் போக்கு இளைஞர்களிடம் குறைந்து விட்டது. எல்லாம் ஆன்லைன் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும்  என்ற நிலை  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில துறைகளில் காசு மூலம் பணப் பரிவர்த்தனை நடக்கிறது. இதையும் மாற்றி ஆன்லைன் மற்றும் ஆப்கள் மூலம், அல்லது கார்டுகள் மூலம் நடத்த  வேண்டும்  என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. இதனால் எதிர்காலத்தில் அதிக அளவில் இ பணப்பரிவர்த்தனை செய்ய உதவும் ஆப்கள்  அதிகரித்து விடும். மேலும் வங்கிகளும் ரூபாய் மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனையை சிறிது சிறிதாக குறைத்து கொள்ளும் என்று தெரிகிறது.

* அரசின் யுபிஐ பீம் ஆப் மூலம் மிக அதிக அளவில் இ- பணப்பரிவர்த்தனை நடந்து வருகிறது. ஆப்களில் இந்த வகையில் இது முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 19 கோடி இ பணப்பரிவர்த்தனையை யுபிஐ செய்துள்ளது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 78 கோடியே 20 லட்சம் முறை நடத்தியுள்ளது.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், இ-வாலட்கள் பெருகி வருகின்றன. மக்களும் குறிப்பாக இளைஞர்கள் இ பணப்பரிவர்த்தனை செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

* ஐசிஐசிஐ, எச்டிஎப்சி,  ஆக்சிஸ் போன்ற வங்கிகள் இ-பணப்பரிவர்த்தனையில் அதிக கவனம் செலுத்துகின்றன.

Related Stories: